வாழப்பாடி பகுதியில்  அரிய வகை கரும்பிடரி மாங்குயில், பொரிப்புள்ளி ஆந்தை கண்டறியப்பட்டன: ஆய்வாளர் கலைச்செல்வன் தகவல்

வாழப்பாடி அருகே அரிய வகை பறவைகள் வாழ்வதாக பறவையின ஆய்வாளர் ஆசிரியர் கலைச்செல்வன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வாழப்பாடி அருகே அரிய வகை பறவைகள் வாழ்வதாக பறவையின ஆய்வாளர் ஆசிரியர் கலைச்செல்வன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கரும்பிடரி மாங்குயில் மற்றும் பொரிப்புள்ளி ஆந்தை ஆகிய அரியவகை பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளதாக பறவையின ஆய்வாளரான ஆசிரியர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர், அரிய வகை பறவையினங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
 இதுகுறித்து அவர் தெரிவித்தது: கரும்பிடரி மாங்குயில் பறவைகள் கிழக்கு சைபீரியா, கொரியா மற்றும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் காணப்படுகின்றன. நாம் பொதுவாக பார்க்கும் மாங்குயில் போன்றே தோற்றம் இருந்தாலும், கரும்பிடரி மாங்குயில் உருவத்தில் சற்று பெரியது. கருமை நிற பிடரியானது கண்ணிலிருந்து நீண்டு கழுத்தின் பின்பகுதியில் இணைந்து காணப்படும்.
 கரும்பிடரி மாங்குயில்கள் சிறு பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் தென் இந்தியப் பகுதிக்கு இப் பறவைகள் வலசை வருகின்றன. வலசை காலத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிப்பதில்லை. கரும்பிடரி மாங்குயில்கள் வாழப்பாடியை அடுத்த வெள்ளிக்கவுண்டனூர் மலைக் கிராமத்தில் வசித்துவருவது கண்டறிப்பட்டுள்ளது.
 பொரிப்புள்ளி ஆந்தைகள் சாதாரண ஆந்தைகளை விட அளவில் பெரியவை. வட்ட வடிவ முகத்தைச் சுற்றி கருப்பு நிறமும், சிறகுகள் சாம்பல் நிறத்தில் பொரிப் புள்ளிகளை உடையதாகவும், வயிற்றுப் பகுதி கருப்பு நிறக் கோடுகளுடனும் இருக்கும். சமவெளிகளில் மரப் பொந்துகளில் வசிக்கும். இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை எழுப்பும் ஓசையைத் தொடர்ந்து, பெண் பறவை ஒலியெழுப்பும்.
 இவை, எலிகள், அணில், வெட்டுக் கிளிகள், பல்லிகள், பெரிய பூச்சிகளை உணவாகக் கொள்ளும். இந்த அரிய வகை ஆந்தைகள் வாழப்பாடியை அடுத்த ஏ.என்.மங்களம் வெளவால்தோப்பு கிராமத்தில் வாழ்வதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
 அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பறவையியல் கருத்தாளர் கணேஷ்வர் கூறியது: ஆந்தைகள் நம் வீடுகளின் மேல் அமர்ந்து அலறினால் அது கெட்ட சகுனமென்றும், வீட்டுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை பல காலமாக மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், ஓர் ஆந்தை அலறுவது, மற்றொரு ஆந்தையிடம் தகவல்களைப் பரிமாறத்தான். மேலும், ஓர் ஆந்தை ஓர் இரவில் மட்டும் மூன்று முதல் ஐந்து எலிகள் வரை வேட்டையாடும். கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு ஓர் ஆந்தை மட்டும் ஆயிரம் எலிகளுக்கு மேல் உண்ணும். இதன் மூலம் நம் பயிர்களை எலிகள் மற்றும் ஆபத்தான பூச்சிகளிடமிருந்து ஆந்தைகளும், பிற பறவைகளும் காத்து வருகின்றன.
 நமக்கு மறைமுகமாக உதவிடும் பறவைகள், காடுகளை அழிப்பதாலும், வேட்டையாடுதலாலும் அழிந்து வருகின்றன. எனவே, பறவைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும். நாம் பார்க்கும் பறவைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, வரும் பிப்ரவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை உலக அளவில் நடைபெறும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில், பொதுமக்களும், மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com