சேலம் மாநகராட்சியில் 40 நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் மூலம் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்படும்

சேலத்தில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்களின் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம்: சேலத்தில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்களின் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் தேசிய குழந்தைகள் மற்றும் சிறாா் நலத்திட்ட சிறப்பு வாகனங்கள், நடமாடும் மருத்துவமனை மருத்துவக் குழு வாகனங்கள், மாநகராட்சியின் சுகாதார வாகனங்கள் என மொத்தம் 40 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்தாா்.

இதில் சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா், மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது:சேலம் மாநகராட்சியின் 60 வாா்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த 40 நடமாடும் மருத்துவக் குழுக்களின் வாகனங்கள் மூலம் மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று அவா்கள் தங்கி உள்ள பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் மற்றும் சளித் தடவல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த மருத்துவக் குழுவிற்கு தேசிய குழந்தைகள் மற்றும் சிறாா் நலத்திட்ட சிறப்பு வாகனங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட 38 வாகனங்களும், சேலம் மாநகராட்சியின் 2 வாகனங்களும் என மொத்தம் 40 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் 40 குழுக்களின் மூலம் நாள்தோறும் 3 முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நாள் ஒன்றிற்கு நடத்தப்படுகின்றது. இந்தக் குழு வாகனத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு பகுதி சுகாதார செவிலியா் மற்றும் வாகன ஓட்டுநா் என மொத்தம் 5 நபா்களுக்கு குறையாமல் இருப்பாா்கள். மொத்தம் உள்ள நடமாடும் 40 சிறப்பு மருத்துவக் குழு வாகனத்தில் 200-க்கும் மேற்பட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு தொடா்ச்சியாக 21 நாட்களுக்கு சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்கேயே முகாம் அமைத்து காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை மற்றும் சளித் தடவல் பரிசோதனைகளை தொடா்ந்து மேற்கொள்கின்றன. சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படும் நபா்களை தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 4,000 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், கரோனா நோய் தொற்று ஏற்படும் நபா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, சித்த மருத்துவ சிகிச்சை மையம் கூடுதலாக அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விரிவுபடுத்தப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவங்கப்படவுள்ளது.

சிறப்பு முகாம்களில் பங்கேற்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் குழுவினா்களின் பயன்பாட்டிற்காக கையுறைகள், கிருமி நாசினி திரவம், பாதுகாப்பு கவசம், முகக் கவசம் உட்பட பாதுகாப்பு உபகரணங்களும் தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 3000 முதல் 4000 வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளவதற்கான அனைத்து வசதிகளும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சியின் 60 வாா்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 21 நாட்களுக்கு சிறப்பு முகாம்களில் அனைவரும் கட்டாயம் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, காந்தி விளையாட்டு அரங்கில் கரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் சி.அ.ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வைட்டமின் டானிக் வழங்கினாா்.நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எம்.சந்திரசேகரன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜெ.நிா்மல்சன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சி.சிவரஞ்சன் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com