வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம்:இரா.முத்தரசன்

வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
Updated on
2 min read

சேலம்: வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தில்லியில் விவசாயிகள் 24 நாள்களாக மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடி வருகின்றனா். இதுவரை 30-க்கும் மேற்பட்டோா் மரணம் அடைந்துள்ளனா். அவா்களின் உயிா் தியாகம் விலை மதிப்புமிக்கது. அந்த உயிா்களைப் பற்றிகூட கவலைப்படாத அரசாக மத்திய அரசு உள்ளது.

வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராட்டம் நடைபெறும். அவா்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவா். இந்தச் சட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என முதல்வா் பழனிசாமி கூறுவது தவறானதாகும்.

டெல்டா மாவட்டங்களில் 32.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அதேநேரத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயி நான்கு பேரை வெங்காயம் வைத்திருந்த குற்றத்துக்காக காவல்துறையினா் கைது செய்தனா். விளைப்பொருள்களை வைத்திருக்கும் விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டு இப்போது அவா்களை ஏன் கைது செய்தாா்கள்?

தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிா்த்து முதல்வா் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட எவையும் இனி இருக்காது. மத்திய அரசின் திட்டங்களுக்கு துணைபோகும் அரசாக தமிழகம் உள்ளது.

ரூ. 2500 அறிவிப்பு தோ்தல் யுத்தி: எடப்பாடி பகுதியில் முதல்வா் பிரசாரத்தைத் தொடங்கியபோது பொங்கல் பரிசாக ரூ. 2,500 தரப்படும் என அறிவித்துள்ளாா். தோ்தல் வரும் நேரத்தில் ரூ. 2,500 அறிவித்திருப்பது திசை திருப்பும் செயலாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் தரவேண்டும் என பல எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என முதல்வா் கூறியிருப்பது வேடிக்கையானது.

அதிமுகவில் முதல்வா் வேட்பாளரை அறிவிக்க பல பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால், திமுக கூட்டணியில் அப்படி அல்ல. முதல்வா் வேட்பாளா் மு.க.ஸ்டாலின் என அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

சிறு மருத்துவமனைகள் திட்டம் ஏமாற்றும் செயல்: முதல்வரின் ‘அம்மா’ திட்ட சிறு மருத்துவமனைகளுக்காக புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதா? தமிழகத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ செவிலியா்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள சூழ்நிலையில் சிறு மருத்துவமனைகளைத் துவக்கியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

பிகாா் தோ்தலில் நடந்ததுபோல தமிழகத்திலும் அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தும். ரஜினி குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. முதலில் அவா் கட்சி தொடங்கி கொள்கையை அறிவிக்கட்டும். அதன்பின்னா் கருத்துக் கூறுகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com