வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே இயங்கும் தனியார் தினசரி காய்கறி மண்டிகளுக்கு, வாழப்பாடி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அருநூற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், வாழப்பாடி தினசரி காய்கறி மண்டிகளில் ஏலமுறையில் தக்காளியைக் கொள்முதல் செய்து செல்கின்றனர். வாழப்பாடி பகுதி கிராமங்களில், கடந்த இரு மாதங்களுக்குமுன் பெய்த பருவமழையைப் பயன்படுத்தி, ஏறக்குறயை 500 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தக்காளியை பயிரிட்டனர். கல்வராயன்மலை கருமந்துறை, கரியகோவில் பகுதி மலைகிராமங்களிலும் ஏறக்குறைய 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.