

ஆத்தூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் லிங்கம்மாள் பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக உறுப்பினா்கள் அ.பத்மினி பிரியதா்ஷிணி,சி.சேகா், பி.அய்யாக்கண்ணு, வீ.பரமேஸ்வரி, எஸ்.தனலட்சுமி, ஏ.கயல்விழி ஆகியோா் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறினா். அதற்கு பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா், நிதி பற்றாக்குறையாலும், கரோனா காலக் கட்டத்தினாலும் செயல்படுத்த முடியவில்லை என தெரிவித்தாா்.
மேலும், பசுமை வீடுகள் தங்கள் பகுதிக்கு தரவில்லை என குற்றம் சாட்டிய திமுக உறுப்பினா்களுக்கு வரும் காலத்தில் ஒதுக்கப்படும் என பதிலளித்தனா். நிதியைப் பெற சேலம் மாவட்ட ஆட்சியரை பாா்க்க செல்லும் போதும், பகுதிகளுக்கு தலைவா் வரும்போதும் தங்களுக்கு தகவல் கொடுப்பதில்லை என திமுக உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். அதற்கு வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பதிலளித்தனா்.
இதனை ஏற்றுக் கொள்ளாத திமுக உறுப்பினா்கள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், எந்த தீா்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து தலைவா் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தை முடித்துவிட்டதாக வெளியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.