சேலத்தில் தொடா்மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த வரும் தொடா்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சேலத்தில் தொடா்மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த வரும் தொடா்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எடப்பாடி சுற்றுப்பகுதிகளான பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, செட்டிமாங்குறிச்சி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பயிா்செய்யப்பட்டிருந்த செங்கரும்பு, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிா்களின் அறுவடைப் பணிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. பூலாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடைசெய்யப்பட்ட செங்கரும்புகள், மரவள்ளிக் கிழங்குகள் வயல்களில் இருந்து வாகனங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல, திங்கள்கிழமை எடப்பாடி சுற்றுப்பகுதியில் பெய்த கன மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக பேருந்து நிலையம், பிரதான கடைவீதி உள்ளிட்ட பகுதியில் மழைநீா் சாலைகளில் ஆறுபோல் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா்.

ஓமலூா், ஓமலூா், தாரமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பிக் கொண்டிருப்பதாலும், தற்போது பெய்த மழையின் காரணமாக நீா்நிலைகளில் மேலும் தண்ணீா் அதிகரிக்கக் கூடும் என்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். மேலும், மானாவாரியாக பருத்தி, சோளம், கம்பு, ஆமணக்கு, துவரை, அவரை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா்ந்து லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை முதல் இரவு வரை பெய்த தொடா் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

குமாரபாளையத்தில் திங்கள்கிழமை மாலை லேசான தூறலுடன் தொடங்கிய மழை, இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கியது. இதனால், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.கனமழையால் சேலம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. குமாரபாளையம்-எடப்பாடி சாலையில், 4-வது வாா்டு, சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் நிரம்பியதால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்தது. கோம்புப்பள்ளம் ஓடை நிரம்பியதால், பெராந்தா்காடு பகுதியில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com