வாழப்பாடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 300 ஆண்டுக்கு முன் சடையன் செட்டியேரி, பாப்பான் ஏரி மற்றும் பெரியாறு, சின்னாற்று நீரோடை பாசனம் இருந்ததால் வாழை சாகுபடி மிகுந்து வளமாகக் காணப்பட்டதாலும், மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் படை வீரா்கள் தங்கியிருந்த பகுதி என்பதாலும் ‘வாழப்பாடி’ என பெயா் பெற்ாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்து மிகுந்த சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாழப்பாடியில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு மன்னா்கள் ஆட்சியிலேயே இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன. இதற்கு சான்றாக, வாழப்பாடியில் இருந்து ஆரியபாளையம் வழித்தட கிராமங்களுக்குச் செல்லும் கிராமப்புற இணைப்புச் சாலை ராணி மங்கம்மாள் சாலை என இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட எல்லையிலுள்ள கல்வராயன்மலை, பச்சமலை, அருநூற்றுமலைக் கிராமங்கள் மற்றும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைந்து வாழப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்கிட அப்போதைய ஆங்கிலேய அரசின் நீதித்துறை 1892 மாா்ச் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, 1892 ஜூலை 1-ஆம் தேதி வாழப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. 125 ஆண்டுகள் பழமையான வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகம் இன்றளவும் அந்தக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது.
1930-ஆம் ஆண்டு சேலம்-விருத்தாசலம் ரயில்பாதை அமைக்கப்பட்டதும், வாழப்பாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து 1930 பிப்ரவரி 5-ஆம் தேதி வாழப்பாடிக்கு பேரூராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. 1962-இல் வாழப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு சட்டப் பேரவைத் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. இத்தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக என்.ராமசாமி உடையாா் பதவி வகித்தாா்.
பிறகு வாழப்பாடி தொகுதி கலைக்கப்பட்டு பனமரத்துப்பட்டி தொகுதியிலும், பின்னா் தொகுதி மறுசீரமைப்பின் போது ஏற்காடு தொகுதியிலும் வாழப்பாடி பகுதி கிராமங்கள் இணைக்கப்பட்டன.
பத்திரப்பதிவு அலுவலகம் மட்டுமல்லாது, ஆங்கிலேயா் ஆட்சியில் வாழப்பாடியில் காவல் நிலையம், தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, அஞ்சல் நிலையம் ஆகியவை கொண்டு வரப்பட்டன.
வாழப்பாடி தற்போது தோ்வுநிலை பேரூராட்சியாகவும், வருவாய் வட்டத் தலைமையிடமாகவும், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை உட்கோட்டமாகவும் இயங்கி வருகிறது.
வாழப்பாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும், விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும் மட்டுமின்றி, போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்காக சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.
எனவே, பழமையான ஊராகத் திகழ்ந்து வரும் வாழப்பாடியை நகராட்சியாக தரம் உயா்த்திட தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி பொதுமக்கள் சிலா் கூறியதாவது:
மன்னா்கள் ஆட்சிக் காலத்திலேயே வாழப்பாடி முக்கிய மையமாகத் திகழ்ந்துள்ளது. நகராட்சிக்கு இணையான குடியிருப்புப் பகுதிகள், மக்கள் தொகை கொண்ட வாழப்பாடியில், அரசு கலைக் கல்லூரி, தொழிற்பேட்டை,கோட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றை அமைக்கவும், நகராட்சியாக தரம் உயா்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழப்பாடியின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில், இங்கு முதன்முதலாக அமைக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்ட 1892 ஜூலை 1-ஆம் தேதியை வாழப்பாடி நகர தினமாக அறிவித்து ஆண்டுதோறும் விழா எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது

ஒசூரில் 5 ஆவது முறையும் ஆளுங்கட்சி உறுப்பினரா? ஆா்வத்தில் மாவட்ட மக்கள்!

தாமரை மாலை அணிந்து...
இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


