கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ 3.5 கோடிக்கு விற்பனையானது.
மாநிலத்தின் மிக முக்கிய வேளாண் விற்பனை மையங்களில் ஒன்றான, கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று விவசாயிகளின் விளைபொருட்களுக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை, விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் , சனிக்கிழமை அன்று இம்மையத்திற்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த 12 ஆயிரம் பருத்தி மூட்டைகளை,
கூட்டுறவுத்துறை அலுவலர்கள் 1900 லாட்டுகளாக பிரித்து, பொது ஏலம் விட்டனர்.
ஏலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், மற்றும் நூற்பாலை உரிமையாளர்கள், பருத்தி மூட்டைகளை ஏலம் கூறி மொத்த கொள்முதல் செய்தனர். இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.8200 முதல் ரூ.9519 வரை விலைபோனது.
அதேபோல் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 6500முதல் ரூ.7609 வரை விற்பனையானது.
கடந்த வாரத்தை விட, நிகழ்வார ஏலத்திற்கு, கூடுதலான எண்ணிக்கையில் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு வந்திருந்த நிலையில், சனிக்கிழமை மாலை வரை நடைபெற்ற பொது ஏலத்தில் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ.3.5 கோடிக்கு விற்பனையானது.
கடந்த ஐந்து வாரங்களாக, பருத்தியின் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், நிகழ்வாரத்தில் மேலும் உயர்வு கண்டுள்ளதாக பருத்தி விவசாயிகள் தெரிவித்தனர்.