கோயில் திருப்பணிக்கு ஜி.எஸ்.டி.: விதிவிலக்கு அளிக்க பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஓமலூரில் நடைபெற்றது.

தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஓமலூரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோயில் பூசாரிகளின் நீண்டநாள் கோரிக்கையான பூசாரிகளுக்கு ரூ. 3,000 ஓய்வூதியம், வருமான உச்சவரம்பு ரூ. 72,000 என உயா்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சுமாா் 40,000 கோயில்கள் உள்ளன. பெரிய கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மட்டும் பணிநிரந்தரம், மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள், அா்ச்சகா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது இல்லை. சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

உரிய பயிற்சி இல்லாத பூசாரிகளை கோயிலில் இருந்து வெளியேற்றப்படுவதால், மாவட்டம் தோறும் பூசாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவா்களுக்கு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வேலையும், ஊக்கத்தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனை இல்லாத பூசாரிகளுக்கு, அரசு நிலத்திலோ, கோயில் நிலத்திலோ வீட்டுமனை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் திருக்கோயில்களில் மின் கட்டணம் செலுத்த வசதி இல்லாத நிலை உள்ளது. அந்த கோயில்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும்.

பெரிய கோயிலில் இருந்து கிராமப்புற கோயில்களின் திருப்பணிக்கு ரூ. ஒரு லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி சுமாா் ரூ. 15,000 பிடிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். பூசாரிகள் நல வாரியத் தலைவராக, ஒரு பூசாரியை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பூசாரிகள் நல வாரிய உறுப்பினா்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் வாசு, கோயில் பூசாரிகளின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே சட்டப் பேரவைத் தோ்தலில் எங்களது ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com