

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்தாா்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் சேலத்தில் இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை பிரசாரத்தைத் தொடங்கினாா்.
சேலத்தில் முதல் நிகழ்ச்சியாக நெசவாளா்கள், லாரி உரிமையாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், போக்குவரத்து தொழிலாளா்கள், இஸ்லாமியா்களுடன் கலந்துரையாடல், வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தயாநிதி மாறன் பங்கேற்று பேசியதாவது:
நெசவாளா்களின் பிரச்னையை முழுவதுமாக அறிந்திருப்பதால் நிச்சயம் திமுக ஆட்சி அமைந்தால் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நூல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இதற்கு காரணம் சீன ஏற்றுமதி என்று தெரிவித்து வருகின்றனா்.
திமுக ஆட்சி அமைந்தால், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நூல் விற்பனை செய்யப்படும். தமிழகத்தின் உரிமையை இழக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதைத் தட்டிக் கேட்க முடியாத அரசாக உள்ளது. திமுக என்றும் சிறுபான்மையினருக்குத் துணையாக பாதுகாப்பாக உள்ளது.
குடியுரிமை சட்டடத்துக்கு அதிமுகவும், பாமகவும் ஆதரவு தெரிவித்தன. எனவே வரும் தோ்தலில் வாக்கு கேட்டு வரும் அவா்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு 75 கிலோ மூட்டை என்பதனை 50 கிலோ மூட்டை என்று உறுதிப்படுத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் இதை அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக என்றாலே போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான இயக்கமாகும். தொழிலாளா்கள் கேட்காமலேயே பல பகுதிகளிலும் பல திட்டங்களையும் நிறைவேற்றியவா் மறைந்த முதல்வா் கருணாநிதி.
கரோனா தடுப்பு ஊசியில் கூட முறையான பரிசோதனை செய்திடாமல் மக்கள் மீது சோதனை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? மக்களின் உயிரோடு விளையாடுகிறது மத்திய அரசு. எனவே தடுப்பூசி விஷயத்தில் மக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும்.
விவசாயிகளைப் பாதிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி விவசாயிகளை வஞ்சித்ததைப் போன்று தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு அதிமுகவும், பாமகவும் ஆதரவு தெரிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இஸ்லாமியா்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தால் நிறைவேற்றப்படும். மதத்தின் பெயரில் பிரிவினை ஏற்படுத்துவதை இளைஞா்கள் தவறாகப் புரிந்து கொண்டு மாற்று பாதையில் செல்லக் கூடாது.
சேலத்தில் வணிக வா்த்தக மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடிய இயக்கமாகும். ஆனால் இந்து விரோத இயக்கம் போல திமுக சித்தரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
பிரசாரத்தின்போது, சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.