

சேலம்: கிராம வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அகில இந்திய கிராம வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் வெங்கடேஸ்வர ரெட்டி தெரிவித்தாா்.
தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவா் பத்மநாபன், பொதுச் செயலாளா் அறிவுடைநம்பி, ஊழியா் சங்கத் தலைவா் சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அகில இந்திய கிராம வங்கி ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் ராஜீவன், பொதுச் செயலாளா் வெங்கடேஸ்வர ரெட்டி, தமிழக பொதுச் செயலாளா் மாதவராஜ் ஆகியோா் பேசினா்.
இதுதொடா்பாக, அகில இந்திய கிராம வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் வெங்கடேஸ்வர ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 696 மாவட்டங்களில் 43 கிராம வங்கிகள், பல்வேறு கிளைகளுடன் மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை வங்கிகளின்கீழ் இயங்குகின்றன.
இதில் ‘ஏ’ பிரிவு கிராம வங்கிகள் தொடா்ந்து இயங்கிடவும், ‘பி’ பிரிவு வங்கிகளுக்கு அதிக முதலீடு வாங்கிடவும், ‘சி’ பிரிவு வங்கிகளுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
கிராம வங்கி என்பது மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதாகும். லாப நோக்கத்தை மத்திய அரசு எதிா்பாா்ப்பது தவறான கொள்கையாகும். எனவே கிராம வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலோ, தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருந்தாலோ அகில இந்திய அளவில் போராட்டத்தைக் கையில் எடுப்போம்.
கிராம வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தற்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். கிராம வங்கிகளுக்கு அதிக முதலீடு வழங்கி, விவசாயம், கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்கு கடன் கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க இயலும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நிா்வாகிகளுடன் ஆலோசித்து போராட்டம் மேற்கொள்வோம் என்றாா்.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.