எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனை விஷ ஊசி போட்டுக் கொன்ற தந்தை?

கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தனது மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக எழுந்த புகாரில், தந்தையிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தனது மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக எழுந்த புகாரில், தந்தையிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி கிராமம், குட்டைக் காரன் வளவு, இப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இவரது மனைவி சசிகலா, இத்தம்பதிகளுக்கு செந்தமிழ்-18, வண்ணத் தமிழ்-14  என இரு மகன்கள் இருந்து வந்தனர். இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு வண்ணதமிழ் சைக்கிள் ஓட்டி பழகிய நிலையில், கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

காலில் காயமடைந்த வண்ண தமிழுக்கு அப்போதிருந்த கரோனா நோய்த்தொற்று அதிகரித்து இருந்த சூழ்நிலையில், உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், அவனது பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவம் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வண்ணத் தமிழின் காலில் காயம் ஏற்பட்ட பகுதியில் புற்றுநோய் உருவானதாகவும் அது மிகவும் மோசமடைந்து மிகவும் பாதிப்புக்குள்ளான நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரியசாமி தனது மகனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்த போதும் வண்ணத் தமிழின் காலில் ஏற்பட்ட புற்று நோய், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது. இதனால் வண்ணத்தமிழ் கடும் வேதனையில் துடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சிகிச்சை அளித்து பணம் இல்லாத சூழ்நிலையில் மகனின்,  துன்பத்தை காணப் பொறுக்காத பெரியசாமி அவரை கொலை செய்வது என முடிவு எடுத்துள்ளார். 

இதனையடுத்து எடப்பாடி பகுதியில் உள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரை அணுகிய பெரியசாமி தன் மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து விடும்படி கெஞ்சியுள்ளார். இந்நிலையில் ஞாயிறு அன்று மாலை பெரியசாமி வீட்டுக்கு வந்த மருத்துவ உதவியாளர் வண்ணத் தமிழுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்டு சிறிது நேரத்தில் வண்ணத் தமிழ் சுருண்டு விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. 

திடீரென்று வண்ணத் தமிழ் இறந்தது குறித்து அப்பகுதியினர் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து பொதுமக்கள புகாரின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வருகை தந்த கொங்கணாபுரம் போலீஸார், வண்ணத் தமிழ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு ஊசி போட்டு மருத்துவ உதவியாளர் மற்றும் வண்ணத் தமிழின் தந்தை பெரியசாமி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தனது மகனை தந்தையே விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com