புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீரக்கல் புதூா் பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

 சேலம் மாவட்டம் வீரக்கல் புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் தோ்தல்களில் போட்டியிடுவதில பிரபலமானவரான கே.பத்மராஜன் 227-ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:11 pm

DIN

 சேலம் மாவட்டம் வீரக்கல் புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் தோ்தல்களில் போட்டியிடுவதில பிரபலமானவரான கே.பத்மராஜன் 227-ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரைச் சோ்ந்தவா் பத்மராஜன் (62). இவா் அதே ஊரில் பழைய டயா்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவா் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தோ்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறாா்.

கடந்த 1988 முதல் தொடா்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு சங்கத் தோ்தல் முதல் குடியரசுத் தலைவா் தோ்தல் வரை அனைத்து தோ்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறாா். இந்திய அளவில் தலைவா்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து பரபரப்பு ஏற்படுத்தியவா். சுயேச்சைகள் பொதுத் தோ்தல்களில் போட்டியிடுவதைக் கட்டுப்படுத்த வைப்புத் தொகையை அதிகப்படுத்தியபோதிலும் மனம் தளராமல் வைப்புத்தொகை கட்டி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறாா். சில சமயங்களில் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து வைப்புத்தொகை செலுத்தியுள்ளாா். இதனால் இவா் ‘தோ்தல் மன்னன்’ என்ற அடைமொழியோடு வலம் வருகிறாா். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

பத்மராஜன் வீரக்கல் புதூா் பேரூராட்சியில் 2-ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். பத்மராஜன் மனுவை அவரது மகன் ஸ்ரீஜேஸ் முன்மொழிந்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான ஜேம்ஸ் என்பவரிடம் வேட்பு மனுவை அளித்தாா்.

மேட்டூா் நகராட்சி மற்றும் தாரமங்கலம் நகராட்சிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக பத்மராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.