தும்பல் கல் வட்டங்கள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு

தும்பல் கிராமத்தில் காணப்படும் முதுமக்கள் ஈமத்தாழி கல் வட்டங்களை பாதுகாக்க வேண்டுமென்று  வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தும்பல் கிராமத்தில் கல் வட்டங்களை ஆய்வு செய்த தொல்லியல் துறை அலுவலர்கள்.
தும்பல் கிராமத்தில் கல் வட்டங்களை ஆய்வு செய்த தொல்லியல் துறை அலுவலர்கள்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பல் கிராமத்தில் காணப்படும் முதுமக்கள் ஈமத்தாழி கல் வட்டங்களை பாதுகாக்க வேண்டுமென்று  வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  மக்கள், இறந்துபோன முதியோர்களின் உடல்களை தடிமான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர். இவற்றையே முதுமக்கள் தாழி என்றழைக்கின்றோம்.  மக்கள் வாழ்வியல் கலாச்சாரத்தை சித்தரிக்கும் இந்த முதுமக்கள் தாழியில் இறந்து போன முதியோர்களின் உடல்கள் மட்டுமின்றி, இவர்கள் பயன்படுத்தி  ஓரிரு பொருட்களையும் சேர்த்தும் புதைத்துள்ளனர். 

இந்த ஈமத்தாழி நினைவுச் சின்னங்களை சுற்றி, வட்டவடிவில்  கற்களை பதித்து வைத்துள்ளனர். இதனால், இந்த ஈமச்சின்னங்கள் கல் வட்டம் என வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. 

வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்  தும்பல் கிராமத்தில், 1000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றாக,  தும்பல் - கோட்டப்பட்டி பிரதான சாலையையொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடக்கு புறத்தில் தனியார் நிலத்தில் இன்றளவும் ஏராளமான கல் வட்டங்கள் காணப்படுகின்றன.

கல்வராயன்மலை அடிவாரம் தும்பல் கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் வட்டங்கள்  காணப்படுவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொன்.வெங்கடேசன், சி.பொன்னம்பலம், பெ.பெரியார்மன்னன் ஆகியோர் கொண்ட குழுவினர்  2016–ல் கண்டறிந்து ஆவணப்படுத்தினர். 

கல் வட்டங்கள் அமைந்துள்ள பகுதி தனியார் நிலம் என்பதால் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் போது  பல கல் வட்டங்கள் சிதைக்கப்பட்டது. தற்போது 5 கல் வட்டங்கள் மட்டுமே சிதையாமல் முழுமையாக காணப்படுகின்றன.

எஞ்சியுள்ள கல் வட்டங்களையாவது சிதைக்காமல் பாதுகாப்பதற்கு, சேலம் மாவட்ட நிர்வாகமும், தொல்லியத்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, தும்பல் கல் வட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க, தொல்லியல் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தொல்லியல் துறை சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்ட அலுவலரும், பெரும்பாலை அகழாய்வு திட்ட இயக்குநருமான பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், மயிலாடும்பாறை அகழாய்வு திட்ட இயக்குநருமான  வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர், தும்பல் கிராமத்திற்கு சென்று கல் வட்டங்களை ஆய்வு செய்தனர். படங்கள் மற்றும் விடியோ காட்சிகளாக பதிவு செய்து சென்றனர். இந்த நிலப்பகுதி குறித்து வருவாய்த்துறை ஆவணங்களையும் சேகரித்து சென்றனர். 

தும்பல் கல் வட்டங்கள் குறித்து  தமிழக அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் விரிவான அறிக்கை அளிக்கப்படுமெனவும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஏற்ப, கல் வட்டங்களை பாதுகாக்கவும், அகழாய்வு நடத்துவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். கோரிக்கை விடுத்ததும் ஆய்வுக்கு ஏற்பாடு செய்த  தமிழக அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் சேலம் வரலாற்று ஆய்வு மைய வரலாற்று ஆர்வலர்கள் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com