காவிரி பாசனப் பகுதிகளில் மெழுகு வண்டுகள் படையெடுப்பு: விவசாயிகள் அச்சம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி வடிநில பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களை பெரும் எண்ணிக்கையிலான மெழுகு வண்டுகள் தாக்கி சேதப்படுத்தி வருகின்றது. 
காவிரி பாசனப் பகுதிகளில் மெழுகு வண்டுகள் படையெடுப்பு: விவசாயிகள் அச்சம்

எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி வடிநில பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களை பெரும் எண்ணிக்கையிலான மெழுகு வண்டுகள் தாக்கி சேதப்படுத்தி வருகின்றது. 

இதனைக் கட்டுப்படுத்த இயலாமல் அப்பகுதி விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசன பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிர்களை ஆயிரக்கணக்கான மெழுகு வண்டுகள் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பில்லுக்குறிச்சியை அடுத்த காசி காடு பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கந்தசாமி கூறுகையில்: 

தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்குகள் நன்கு செழித்து வளரத் தொடங்கி உள்ள நிலையில், இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான மெழுகு வண்டுகள் பெரும் படையாக வந்து மரவள்ளிக்கிழங்கு பயிர்களை கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்து, கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதுகுறித்து சந்தியூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ரவி ஆகியோர் கூறுகையில்: 

இவ்வகை வண்டுகள் மரவள்ளி, கரும்பு, பாக்கு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இரவு தொடங்கும் நேரத்தில் அதிக எண்ணிக்கையில் படையெடுக்கும். இவ்வகை வண்டுகள் மழைக் காலங்களில் பரவலாக வெளிவர தொடங்கும். ஜூன் வண்டுகள் என்று அழைக்கப்படும் இவ்வகை வண்டுகள் பெரும்பகுதி சேகரிக்கப்பட்ட தொழு உரக் குவியல்கள், சிறு குன்றுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இனப்பெருக்கம் அடைந்து மிக அதிக எண்ணிக்கையிலான படைகளாக பயிர்களைத்தாக்கிடும். 

குறிப்பாக இவை பயிர்களின் வேரையும், இலைகளையும் தாக்கி அழிக்கக்கூடியது. இவற்றைக் கட்டுப்படுத்த மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரங்களில் வயல்வெளிகளில் மிக அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைத்து, அவற்றின் முன் பெரிய அளவிலான விரிப்புகளை அமைத்து, அங்கு பறந்து வந்து விழும் அதிக எண்ணிக்கையிலான வண்டுகளை சேகரித்து பூச்சிக்கொல்லி மருந்து கரைசலில் இட்டு அழித்துவிடவேண்டும். 

மிகுந்த அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வண்டுகளை அழிப்பது குறித்து நேரிடை செயல்விளக்கம், விரைவில் காவிரி வடிநில பகுதியில் நடைபெற உள்ளதாக சந்தையூர் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com