சேலம் திருமணிமுத்தாறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சேலம் மாவட்ட இயற்கை விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
சேலம் திருமணிமுத்தாறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சேலம்: சேலம் மாவட்ட இயற்கை விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. புகார் மனுவில் சேலம் மாவட்டம் வீரபாண்டி,  கொண்டலாம்பட்டி போன்ற பகுதியையொட்டியுள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கடந்த காலங்களில் நல்ல முறையில் நிலத்தடி நீர் மூலம் விவசாயம் செழித்து வந்தது. 

ஆனால் கடந்த சில வருடங்களாக திருமணிமுத்தாறு மற்றும் ராஜவாய்க்கால்கள் ஓரங்களில் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தற்போது நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து சாயக் கழிவுகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டது குறித்த பயிர்களையும் அவர்கள் காட்சிக்காக எடுத்து வந்தனர். இதுகுறித்து இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ் கூறும்போது, சேலத்தில் ராஜ வாய்க்கால் மற்றும் திருமணிமுத்தாறு கரையோரப் பகுதிகளில் அனுமதி இல்லாமல் செயல்படும் சாயப்பட்டறைகளினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து முறையிட வந்துள்ளதாகவும், உடனே நடவடிக்கை எடுத்து அனுமதி இல்லாத சாயப்பட்டறை அகற்றினால் மட்டுமே தங்களுக்கு விவசாயம் செய்ய தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் சாயக் கழிவுகள் மற்றும் காய்ந்துபோன பயிர்களுடன் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com