எடப்பாடியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி திடீர் மாயம்
By DIN | Published On : 02nd May 2022 01:03 PM | Last Updated : 02nd May 2022 01:03 PM | அ+அ அ- |

எடப்பாடியில் பள்ளிக்கு வந்த 12ஆம் வகுப்பு மாணவி திடீர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் தனது தோழிகளிடம் வெளியில் உள்ள கடையில் பேப்பர் வாங்கி வருவதாக கூறி அவர் சென்றுள்ளார். வெளியில் சென்ற அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு திரும்பாததை அறிந்த சக மாணவிகள் இதுகுறித்து வகுப்பு ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் பல்வேறு பகுதிகளில் மாணவியைத் தேடி பார்த்த ஆசிரியர்கள் அவர் பள்ளியில் இல்லாதது குறித்து அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகளை பல்வேறு இடங்களிலும் தேடிய அவரது பெற்றோர் பள்ளிக்கு வந்த தனது மகள் காணவில்லை என்றும், ஆத்தூர் கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணிமாறன் என்பவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், காணாமல் போன தங்களது மகளை மீட்டு கொடுக்கும்படி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க- அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்: ஜூன் முதல் வாரம் பதவியேற்பு?
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பள்ளி மாணவியை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். மேலும் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லை எனவும், பள்ளிக்கு வரும் மாணவிகள் பள்ளி வேலை நேரத்தில் வெளியேறுவதை அங்குள்ள ஆசிரியர்கள் கவனிப்பதில்லை எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்கு வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சீருடையுடன் திடீரென மாயமான சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.