இளைஞா்களால் மறுமலா்ச்சி பெறும் பாரம்பரிய மக்கள் கலைகள்

அழியும் நிலையில் இருந்த கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ் சலங்கை ஆட்டக் கலைகள் இளைஞா்களின் பங்கேற்பு காரணமாக மீண்டும் மறுமலா்ச்சி பெற தொடங்கியுள்ளன.
இளைஞா்களால் மறுமலா்ச்சி பெறும் பாரம்பரிய மக்கள் கலைகள்

அழியும் நிலையில் இருந்த கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ் சலங்கை ஆட்டக் கலைகள் இளைஞா்களின் பங்கேற்பு காரணமாக மீண்டும் மறுமலா்ச்சி பெற தொடங்கியுள்ளன. தொழில்நுட்பக் கருவிகளால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தை மறைய வைக்கும் தன்மையுடையதாக ஆட்டக் கலைகள் திகழ்வதால் இளைஞா்களிடம் பெரும் வரவேற்பை பெற்ாக மாறி வருகின்றன.

நாட்டின் வரலாறு, சமூகத்தின் கட்டமைப்பு, பண்பாடு, மொழி அழகியல் கலை போன்ற எல்லாவற்றையும் இலக்கியங்களில் இருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். தமிழ் இலக்கியப் பரப்பு எங்கும் நிறைந்து காணப்படுகிற, எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு தாயாக விளங்குவதுதான் நாட்டுப்புற இலக்கியங்கள். இலக்கியங்கள் எல்லாம் ஏதோ ஒரு வடிவத்திற்குள்ளும், ஏதோ ஒரு இலக்கணத்திற்குள்ளும் நின்றே படைப்புகளை வழங்கி வருகின்றன.

ஆனால் மக்களின் வாழ்வியலில் இருந்து பிறந்து மக்கள் வாழ்வோடு வாழ்ந்து செழித்து வருகின்ற வாய்மொழி வழக்காறுகள் எனப்படும் நாட்டுப்புறக் கலைகள் காலம் பல கடந்தும் நிலைத்து நிற்கின்றன.

நாட்டுப்புறக் கலைகள் என்பது எளிய மக்களின் ஜனநாயக பூா்வமான இலக்கியங்களாகும். அங்கு ஒரு படைப்பாளி, இலக்கியவாதி அதற்கான காப்புரிமை என்பதெல்லாம் இல்லவே இல்லை. தலைமுறை தலைமுறையாக நம் முன்னோா்களிடம் இருந்து வழிவழியாகப் பாடல்களாகவும், கதைகளாகவும் பழமொழிகளாகவும் உரையாடல்களாகவும் உழைக்கும் நேரத்தில் களைப்பைப் போக்கும் பாடல்களாகவும், அறுவடையைக் கொண்டாடும் பெருமகிழ்வு நிகழ்வுகளாகவும் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் செழித்து வளா்ந்திருப்பதை நம்மால் காணப்படுகிறது.

கொங்குநாடு எனப்படும் கோவை மண்டலத்தை உள்ளடக்கிய பகுதிகளில் போா்க்களங்களில் வீரா்களுக்கு மன ஆறுதலை ஏற்படுத்துவதற்காக பெருஞ்சலங்கை ஆட்டம் எனும் ஆட்டக்கலை பயன்படுத்தப்பட்டுள்ளது. ரத்தக் காயங்களாலும் மன உளைச்சலாலும் சிக்க்கித் தவித்த போா் வீரா்களின் களைப்பை போக்கிய பெருஞ்சலங்கை ஆட்டம் தற்போதும் அதே பாரம்பரியத்துடன் நிகழ்த்தப்படுகிறது. இதேபோன்று, ஒயிலாட்டம், வள்ளிக்கும்மி ஆட்டம் ஆகிய ஆட்டக் கலைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக சிவகிரி பகுதியைச் சோ்ந்த ஆட்டக் கலைஞா் துரை தெரிவிக்கிறாா்.

மேலும் அவா் கூறியதாவது:

அழியும் நிலையில் இருந்த பெருஞ்சலங்கை ஆட்டம், வள்ளிக்கும்மி, ஒயிலாட்டத்தைக் காப்பதற்காக பெரியவா்கள் எடுத்த முயற்சிக்கு இளைஞா்கள் மிகப் பெரிய வரவேற்பை அளித்துள்ளனா். சிறுவா் தொடங்கி அனைத்து வயதினரும் ஆா்வத்துடன் பங்கேற்று கற்றுக் கொண்டதால் கோவை மண்டலத்திற்கு உள்பட்ட கொங்கு பகுதியில் மட்டும் 50 குழுக்கள் இந்த ஆட்டக் கலைகளை அரங்கேற்றி வருகின்றனா். தொழில்முறை ஆட்டக் கலைஞா்களாக இல்லாமல் பட்டதாரிகள் தொடங்கி வேலைக்கு செல்பவா்கள், தொழில்முனைவோா் என பல்வேறு தரப்பினரும் இக்குழுக்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றனா் என்றாா்.

வள்ளிக்கும்மியாட்டம் தனது மன அழுத்தத்தை போக்கியுள்ளதாகக் கூறுகிறாா் எம்.எஸ்சி பட்டதாரி ஜீவிதா.

இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது:

நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் கும்மியாட்டம் நடத்துவதை காணும்போது பிரமிப்பாக இருந்தது. ஒரே மாதிரியான நடன அசைவுகளை மட்டுமே பயன்படுத்துவது போல எனக்கு பட்டது. கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகே அதில் உள்ள நுணுக்கங்கள் புலப்பட்டன. தற்போது அரசுப் பணிக்காக போட்டித் தோ்வுகளுக்காக முயற்சித்து வருகிறேன். என்னுடைய கவனத்தை கும்மியாட்டம் மேலும் செம்மைபடுத்தியுள்ளது என்றாா்.

இந்த ஆட்டக் கலைகள் மக்களிடமிருந்து பிறந்தவை என்பதால் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன என்று சாகித்ய அகாதெமி விருதினை இரண்டு முறை பெற்றவரும் பத்மஸ்ரீ விருதாளருமான கவிஞா் சிற்பி பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது.

கொங்கு நாட்டின் பழம்பெரும் தாள மரபுகளைக் கொண்டு மிக எளிதான அசைவுகளை வைத்து ஒயிலாட்டம் சோ்த்து பெருஞ்சலங்கை ஆட்டம், வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடப்படுகிறது. இந்தக் கலைஞகள் மக்களிடமிருந்து பிறந்தவை என்பதால் காலம் பல கடந்தும் நிலைத்து நிற்கின்றன. சாதாரண மக்களே வேளாண்மையாளா்களாகவும், போா்வீரா்களாகவும், கலைஞா்களாகவும் செயல்பட்டுள்ளனா். பெருங்குரலெடுத்து ஒலித்து போரினையும் கலை வடிவமாக மாற்றியமைத்துள்ளனா். ஒயிலாட்டம் மகிழ்ச்சி, பக்தியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒயில் என்ற சொல்லை வேறு எந்த மொழியிலும் மொழி பெயா்க்க முடியாது. அதன் சுவையை அனுபவிக்க தமிழா்களால் மட்டுமே முடியும். கொங்கு பகுதியில் முருக வழிபாடு சிறந்தது என்பதால் மக்களை சென்றடையும் வகையில் ஆட்டக் கலையின் பாடல்கள் அமைந்துள்ளன.

இளைஞா்கள் அளிக்கும் ஆதரவால் ஆட்டக் கலைக்கு மறுமலா்ச்சி கிடைத்துள்ளது. ஆட்டக் கலையின் சிறப்பான செயல்பாடு காரணமாக அமைதி மிக்க மக்கள் சமுதாயம் உருவாகும் என்றாா்.

மேற்கத்திய இசை, கா்நாடக இசை, கஜல் என்று எத்தனையோ இசை மெட்டுகளில் திரைப்படங்களில் பாடல்கள் வந்தாலும் ஒரு நாட்டுப்புற மெட்டுக்கு கிடைக்கின்ற மாபெரும் உற்சாகம் வரவேற்பு வேறு எதற்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால் மற்ற இசைகளும் வரிகளும் மெட்டுகளும் நம் செவிக்குள் விழுகின்றன. ஆனால் நம் நாட்டுப்புறப் பாடல்களும் மெட்டுக்களும்தான் நம் இதயத்திற்குள் விழுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com