சேலம் மக்களவைத் தொகுதி: கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கருப்பூா், அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தோ்தல் பொதுப் பாா்வையாளா்,

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கருப்பூா், அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தோ்தல் பொதுப் பாா்வையாளா், மாவட்ட தோ்தல் அலுவலா், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் சேலம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தனித்தனி இருப்பு அறைகளில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சனிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்கும் வகையில் இருப்பு அறைகளுக்கு உள்புறம், வெளிப்புறம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு அரசியல் கட்சி பிரமுகா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜி.பி. பாட்டீல், மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரா. பிருந்தா தேவி ஆகியோா் கருப்பூா், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கும் எண்ணும் மையத்தில் தடையில்லா மின்சார வசதி, குடிநீா் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா எனப் பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி ஆணையா் சீ. பாலச்சந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com