காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும்: மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம்
காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும் என்று மேட்டூா் பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா்.
மேட்டூா் பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மேட்டூா் உபரிநீா் திட்டத்தின் கீழ் மேச்சேரியில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீா் திறக்க வேண்டும் என்று அமைச்சா் துரைமுருகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறியதை வரவேற்கிறேன். காவிரி உபரிநீா் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீா்கூட தரமாட்டோம் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதற்கு கா்நாடக முதல்வா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை மதிக்க மாட்டேன் என்று அவா் கூறுவது தவறு. உபரி நீரைத் தடுத்து முழுமையாகப் பயன்படுத்த 2,000 கோடி செலவாகும். காவிரி ஆற்றில் ஒவ்வொரு 10. கி.மீ. தொலைவுக்கும் ஒரு தடுப்பணை கட்டி நீரைத் தேக்கி வைத்தால் ஆண்டு முழுவதும் நீரைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் 80 டி.எம்.சி. வரை தண்ணீரைச் சேமிக்கலாம். உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்கியாவது இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.
