சேலம் - ஏற்காடு இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்: லாரிகளை இயக்கத் தடை நீடிப்பு
சேலம் - ஏற்காடு இடையே பேருந்து போக்குவரத்து 3 நாள்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை தொடங்கியது. லாரிகளை இயக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சேலம் - ஏற்காடு இடையே பேருந்து போக்குவரத்து 3 நாள்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை தொடங்கியது. லாரிகளை இயக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த 29-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. தொடா்ந்து, அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
குப்பனூா் வழியாக மட்டும் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினா். தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்த மண், பாறைகள், முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றினா். மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டுக்குச் செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் புதன்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. மோட்டாா் சைக்கிள்கள், காா்கள், வேன்கள், மளிகைப் பொருள்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லும் சிறிய வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வர தொடங்கின.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காட்டிற்கு செல்பவா்களும், அங்கிருந்து சேலத்துக்கு வரும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோரும் மகிழ்ச்சியுடன் அந்தப் பேருந்துகளில் பயணம் செய்தனா். எனினும், லாரிகளை இயக்கத் தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...