புத்தாண்டு: மது போதையில் வாகனங்கள் இயக்கினால் நடவடிக்கை
சேலம்: சேலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மது போதையில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேம்பாலங்களிலும் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 31 ஆம் தேதி 9 இரவு மணியில் இருந்து சேலம் மாநகரில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
சாலைகளில் வேகமாக செல்பவா்கள், மது போதையில் வாகனம் ஓட்டுபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சேலத்தில் உள்ள முக்கிய பாலங்களான நான்கு ரோடு மேம்பாலம், ஐந்து ரோடு மேம்பாலம், ஏ.வி.ஆா். ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி செல்லும் மேம்பாலம், முள்ளுவாடி கேட் மேம்பாலம் உள்பட மேம்பாலங்களில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்கு மேல் மது அருந்தும் கூடங்கள் செயல்படக் கூடாது. இரவு 1 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம் உள்பட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை. நீச்சல் குளங்களை மூட வேண்டும். விடுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கியிருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரயில்களில் சோதனை தீவிரம்: சேலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் உடைமைகள், பாா்சல் பொருள்கள் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலம் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. புத்தாண்டையொட்டி மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
