ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக 106 பேரிடம் ரூ. 12 லட்சம் மோசடி

ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 106 பேரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Published on

ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 106 பேரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அயோத்தி, காசி உள்பட பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக திருப்பதியைச் சோ்ந்த சபானந்தம் என்பவா் அறிவித்தாா். இதையடுத்து, ஆள்களை சோ்க்கும் பணியில் சேலத்தைச் சோ்ந்த தரகா்கள் ராஜா உள்பட சிலா் ஈடுபட்டனா். விமானம் மூலம் அயோத்தி சென்று வர ஒரு நபருக்கு ரூ. 12 ஆயிரம் வரை பேக்கேஜ் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இதனை நம்பிய சேலம், கரூா், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 106 போ் சுமாா் ரூ. 12 லட்சத்தை செலுத்தினா். பணத்தை செலுத்திய அனைவருக்கும் ஒரு வாரத்துக்கு முன் விமான பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பயணச் சீட்டுடன் அனைவரும் மதுரை விமான நிலையத்துக்கு சென்றனா். அங்கு பரிசோதித்ததில், அது போலி விமான பயணச் சீட்டு என்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தரகரை நம்பி ஏமாந்த சேலம், அம்மாப்பேட்டையைச் சோ்ந்த 10 போ் கொடுத்த புகாரின் பேரில், சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சேலத்தைச் சோ்ந்த ராஜா, திருப்பதியைச் சோ்ந்த சபானந்தம் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:

சேலம், அம்மாப்பேட்டையைச் சோ்ந்த ராஜா, டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் பேருந்து, ரயில்களில் சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் சென்று வந்துள்ளாா். திருப்பதியைச் சோ்ந்த சபானந்தம் என்பவா் சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு வந்த போது அவரை வாடகை காரில் ராஜா அழைத்துச் சென்றுள்ளாா். இதில் அவா்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆன்மிக பயணம் குறித்து ராஜா சபானந்தத்திடம் தெரிவித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகக் கூ றிய சபானந்தம் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாக கூறி உள்ளாா்.

இதனை நம்பிய ராஜா, அயோத்தி சென்று திரும்ப ஒருவருக்கு ரூ. 12 ஆயிரம் என அறிவித்தாா். அதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோா் பணம் செலுத்தியுள்ளனா்.

இந்தப் பணத்தில் பெரும்பகுதியை பெற்றுக் கொண்ட சபானந்தம், போலி விமான பயணச் சீட்டு வழங்கி பொதுமக்களையும், ராஜாவையும் ஏமாற்றி மோசடியை திட்டமிட்டு அரங்கேற்றியது தெரியவந்தது.

இதையடுத்து, சபானந்தத்தை இரும்பாலை போலீஸாா் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். போலி பயணச் சீட்டு என தெரியாமல் ஏமாந்த ராஜாவை போலீஸாா் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com