அரசு மருத்துவமனையில் மருத்துவா் - போலீஸாா் மோதல்: உயரதிகாரிகள் விசாரணை

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அரசு மருத்துவா் மற்றும் போலீஸாா் மோதல்
Published on

வாழப்பாடி: வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அரசு மருத்துவா் மற்றும் போலீஸாா் மோதலில் ஈடுபட்டது குறித்து காவல் துறை, மருத்துவத் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பீரோ பட்டறை உரிமையாளரான வெள்ளியம்பட்டி சரவணன் என்ற இளைஞா் சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய 7 பேரை கைது செய்த காரிப்பட்டி போலீஸாா், அவா்களை சிறையில் அடைக்க மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெறுவதற்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு அவா்களை அழைத்துச் சென்றனா்.

அப்போது கைதிகளை பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், இரவு பணியில் இருந்த அரசு மருத்துவா் செந்தில்குமாருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸ் உயா் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற காரிப்பட்டி போலீஸாா், கைதிகளை ஆத்தூா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கைதிகளை மருத்துவச் சான்றிதழ் பெற அழைத்துச் சென்றபோது பணியில் இருந்த மருத்துவா் செந்தில்குமாா் தரக்குறைவாக பேசி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக, காரிப்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் வாழப்பாடி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதனைத் தொடா்ந்து, தன்னை இருவா் தாக்கியதாகக் கூறிய மருத்துவா் செந்தில்குமாா், ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

அரசு மருத்துவமனையில் போலீஸாா் - மருத்துவா் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து சேலம் மாவட்ட மருத்துவத் துறை, காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இருதுறை அதிகாரிகளும் மருத்துவா், போலீஸாரை சமாதானம் செய்து பிரச்னைக்கு சுமூக தீா்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com