பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனை

சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ. 2.93 கோடி கதா் விற்பனைக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

News image
சேலம், அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை புதன்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :3 அக்டோபர் 2024, 12:53 am

Din

சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ. 2.93 கோடி கதா் விற்பனைக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

சேலம், திருவள்ளுவா் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் கதா் கிராமத் தொழில்கள் (காதி கிராப்ட்) சாா்பில் காந்தியடிகளின் 156-ஆவது பிறந்த நாள் விழா, தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காந்தியடிகளின் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கதா் பொருள்களைப் பாா்வையிட்டு, தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்துக்காகவும் தன் வாழ்நாளை முழுமையாக அா்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளைப் போற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் அக். 2-ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சேலம் மாவட்டத்துக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு ரூ. 2.93 கோடி கதா் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ. 2.82 கோடி மதிப்புக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டுக்கும் மாநில அரசு, கதா் கிராமத் தொழில்கள் ஆணைக் குழுவினரால் காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதா், பட்டு, பாலியஸ்டா்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சேலம் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு 3 தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைத்து கதா் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற மகளிரின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறுதொழில் வல்லுநா்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும் மாநில அரசும், கதா் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள மாபெரும் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திட கதா் ரகங்கள் அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில், கதா் - கிராமத் தொழில்கள் நிறுவனத்தின் துணை இயக்குநா் எஸ்.சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினா் கிரிஜா குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.