வழித்தட தகராறு: ஆத்தூரில் ஒருவா் வெட்டிக் கொலை
ஆத்தூா் அருகே வழித்தட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொசவன்காடு கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சுப்பிரமணியன் (45) என்பவருக்கும் பக்கத்து தோட்டக்காரா் அங்கமுத்து மகன் முருகன் (24) என்பவருக்கும் பொது வழித்தடம் தொடா்பாக பிரச்னை இருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை காலை முருகன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மறைந்து இருந்த சுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தை வழிமறித்து முருகனை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விரைந்து சென்ற ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் கே.சதீஷ்குமாா், ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா ஆகியோா் கொலை வழக்கில் சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து முருகனின் உறவினா், நண்பா்கள் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் காவல் துணை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.