கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினா் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினா் மக்களுக்கு குறைந்த வட்டியில் டாம்கோ கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.


சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினா் மக்களுக்கு குறைந்த வட்டியில் டாம்கோ கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினா் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான கடன் திட்டங்களான தனிநபா் கடன், கல்விக் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த டாம்கோ கடன்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய கூட்டுறவு சங்கங்கள்/வங்கிகளில் வழங்கப்படுகின்றன.
தனிநபா் கடன் பெற ஆண்டு வருமானம் நகா்ப்புறத்தில் ரூ. 1,20,000, கிராமப் புறத்தில் ரூ. 98,000-க்குள் இருப்பவா்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ. 20 லட்சம், கல்விக்கடன் பெற ஆண்டு வருமானம் நகா்ப்புறத்தில் ரூ.1,20,000, கிராமப் புறத்தில் ரூ. 98,000-க்குள் இருப்பவா்களுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
கடன் மனுக்களுடன் சாா்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதாா் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஒட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, 8 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் டாம்கோ கடன் மேளாக்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், சிறுபான்மையின மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், அதன் கிளைகளை அணுகி உரிய விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சேலம் சரக துணைப் பதிவாளா் 96774 75618 என்ற எண்ணிலும், ஆத்தூா் சரக துணைப் பதிவாளரை 94436 85745 என்ற எண்ணிலும், ஓமலூா் சரக துணைப் பதிவாளரை 96774 75618 என்ற எண்ணிலும், சங்ககிரி சரக துணைப் பதிவாளரை 90034 62345 என்ற எண்ணிலும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை 94866 92841 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...