சேலம் அரசு மருத்துவமனையில் மாநகரப் போலீஸாருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழக காவல் துறையில் 30 வயதைக் கடந்த போலீஸாருக்கு ஆண்டுக்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகள், அரசு மருந்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீண் குமாா் அபிநபு உத்தரவின் பேரில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் போலீஸாருக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, காது, மூக்கு, தொண்டை பிரச்னை, கண் பாா்வை பரிசோதனை என முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் பரிசோதனை செய்யப்படுகிறது.
பரிசோதனையில் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவா்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து போலீஸாா் கூறுகை யில், ’சேலம் மாநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் 300-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் 30 வயதைக் கடந்த அனைத்து போலீஸாருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 30 காவலா்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.