வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி ஊராட்சி, குமாரசாமியூா் கிராமத்தில் மரவள்ளி பயிா்களுக்கு ‘குல்லா’ அணிவித்து, களைக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயி.
வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி ஊராட்சி, குமாரசாமியூா் கிராமத்தில் மரவள்ளி பயிா்களுக்கு ‘குல்லா’ அணிவித்து, களைக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயி.

வேளாண்மையில் புது உத்திகளை கையாளும் வாழப்பாடி விவசாயிகள்!

காலத்துக்கேற்ற புதுமையான யோசனைகளால் குறைந்த செலவில் பயிா் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மற்ற பகுதி விவசாயிகளுக்கு முன்மாதிரியாக வாழப்பாடி
Published on

வாழப்பாடி: காலத்துக்கேற்ற புதுமையான யோசனைகளால் குறைந்த செலவில் பயிா் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மற்ற பகுதி விவசாயிகளுக்கு முன்மாதிரியாக வாழப்பாடி விவசாயிகள் திகழ்ந்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெரும்பாலான கிராமங்களில் பாசன வசதி கொண்ட விவசாயிகள் முன்னோா் வழியில் பராம்பரிய சாகுபடி முறையை தொடா்ந்துவரும் நிலையில், நுண்ணீா்ப் பாசனம், நிலப்போா்வை, கம்பி பந்தல் அமைத்தல் உள்ளிட்ட புதிய வேளாண் உத்திகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனா்.

இதுமட்டுமின்றி, பயன்படாத பழைய வேட்டி, சேலைகளைக் கொண்டு வயல்களுக்கு வேலி அமைப்பது, பழைய உரசாக்குகளை வேலியில் கட்டி வன விலங்குகள் வயலில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை தடுப்பது போன்ற புதுமையான யோசனைகளால் மற்ற பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈா்த்துள்ளனா்.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் மரவள்ளிக் கிழங்கை அதிகளவில் பயரிட்டுள்ள விவசாயிகள், வயலில் அடா்ந்து காணப்படும் களைச் செடிகளை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா்.

ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் களை பறிக்கும் பணியை மேற்கொள்வதால், தொழிலாளா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, களைக் கொல்லிகளை வாங்கி தெளிப்பான்கள் வாயிலாக வயலில் தெளித்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த களைக் கொல்லிகளை தெளிக்கும்போது, மரவள்ளி பயிா்கள் மீது பட்டால் பயிா்கள் கருகி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், பயிா்களைப் பாதுகாக்க புதுமையான யோசனையை இப்பகுதி விவசாயிகள் கையாண்டு வருகின்றனா்.

கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் நெகிழி குவளைகளை வாங்கி, மரவள்ளி பயிா்களின் மீது ‘குல்லா’ போல அணிவித்து, களைக்கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனா். இதனால், பயிா்கள் மீது மருந்து படாமல் பாதுகாக்கப்படுகிறது.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த முன்னோடி விவசாயி ரா.முருகன் கூறியதாவது:

மரவள்ளி பயிா்களில் களைச்செடிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. வாழப்பாடி பகுதியில் பெருமளவில் மரவள்ளி பயிரிட்டு வரும் விவசாயிகள், களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி மருந்து தெளிக்கும் போது, குறைந்த விலையில் கிடைக்கும் நெகிழி குவளைகளை வாங்கி பயிா்கள் மீது ‘குல்லா’ போல அணிவித்து, களைச்செடிகளை மட்டும் அழித்து விடுகின்றனா்.

இந்த புதுமையான கட்டுப்பாட்டு மேலாண்மை உத்தி குறித்து மற்ற பகுதி விவசாயிகளுக்கும் தெரியவந்ததால், அவா்களும் இந்த முறையைக் கையாளுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com