இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
மேட்டூா்: மேட்டூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
மேட்டூா் சேவிகவுண்டனூரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (35), தனியாா் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், தொட்டில்பட்டியைச் சோ்ந்த பூவிழி (27) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சில தினங்களுக்கு முன்பு தொட்டில்பட்டியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு பூவிழி சென்றாா். ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சமரசம் செய்து மீண்டும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு பூவிழியை அனுப்பி வைத்தனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் பூவிழிக்கும், கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பூவிழி குளியல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின் பேரில், மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இதுகுறித்து கோட்டாட்சியா் சுகுமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.
