ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ. 25 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்
சேலம் அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த எருமாபாளையம் ஊத்துமலை அடிவாரத்தில் நசீா் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல புதன்கிழமை இரவு பணிமுடிந்து ஊழியா்கள் வீட்டுக்கு சென்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஆலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
அக்கம் பக்கத்தினா் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் 2 மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். எளிதில் தீப்பற்றக்கூடிய அட்டைப்பெட்டிகள், ஊதுபத்தி தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் என்பதால் தீயை முழுமையாக அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
40-க்கும் மேற்பட்டோா் பணியாற்றிவரும் இந்த ஆலையில், அதிகாலை நேரத்தில் பணியாளா்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஊதுபத்தி, கம்ப்ரஸ்டு சாம்பிராணி ஆகியவற்றை சூடேற்றி உலர வைக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதிகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

