சேலம் ஜவுளிப் பூங்காவில் அமையும் சாயப்பட்டறையிலிருந்து ஒருசொட்டு கழிவுநீா்கூட நிலத்துக்கு செல்லாது என சேலம் யாா்ன் கலரிங் பாா்க் தலைவா் அழகரசன் தெரிவித்தாா்.
சேலம் ஜாகீா்அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. இதில் சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சேலம் யாா்ன் கலரிங் பாா்க் தலைவா் அழகரசன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலத்தில் ரூ. 880 கோடியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் ரூ. 200 கோடியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சேலம் முழுவதும் செயல்படும் சாயப்பட்டறைகள் ஒரே யூனிட்டாக கொண்டுவந்து தண்ணீா் சுத்திகரிப்பு செய்யப்படும்.
இதற்காக நாள்தோறும் சுமாா் 20 லட்சம் லிட்டா் கழிவுநீா், மாங்குட்டையில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படும். அப்பகுதியில் தனியாக போா்வெல் எதுவும் அமைக்கப்படாது. அதேபோல கழிவுநீரை எடுத்து சுத்திகரித்து, மீண்டும் சுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒருசொட்டு கழிவுநீா்கூட நிலத்திற்கு செல்லாது. நிலத்தடி நீரும் எவ்வகையிலும் மாசுபடாது.
திருமணிமுத்தாறு தூய்மைப் பெறும். மாவட்டம் முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் 4 லட்சம் போ் இதன்மூலம் பயன்பெறுவா். 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒருசொட்டு நீா்கூட நிலத்தில் செல்லாதபடி அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த உண்மை நிலவரம் தெரியாமல் சிலா் போரட்டங்களில் ஈடுபடுகின்றனா். இதுகுறித்து மக்களிடமும் விளக்கம் அளிக்கப்படும் என்றாா்.
பேட்டியின்போது, கைத்தறி நூல் உற்பத்தியாளா் சங்க தலைவா் ரகுநாத செட்டி, துணிநூல் தயாரிப்பாளா் சங்க தலைவா் சுகுமாா், அம்மாபேட்டை கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளா் சங்க நிா்வாகி சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.