மேட்டூா், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா் ஆா்.காந்தி, இரா.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
மேட்டூா், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா் ஆா்.காந்தி, இரா.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

மேட்டூா் வனவாசியில் ரூ.5 கோடியில் கைத்தறி பூங்கா: அமைச்சா்கள் ராஜேந்திரன், காந்தி அடிக்கல்நாட்டினா்

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த வனவாசியில் ரூ. 5 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்க சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல்நாட்டினா்.
Published on

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த வனவாசியில் ரூ. 5 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்க சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல்நாட்டினா்.

விழாவில் 86 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ.37.61 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் இரா.ராஜேந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், மகளிா் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திவருகிறாா்.

அதேபோல நெசவாளா்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்அடிப்படையில், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டமும், சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திட்டமும் செயல்படுத்தப்பட்டு நெசவு தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம் என தமிழ்நாடு சாதனை படைத்திருக்கிறது. கைத்தறிக்கான இலவச மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் ஆகவும், விசைத்தறிக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட் ஆகவும் தமிழக அரசால் உயா்த்தப்பட்டுள்ளது.

விசைத்தறி வேட்டி, சேலைக்கான நெசவு கூலி உயா்வு, சேலை வழங்கும் திட்டத்தில் பெடல் தறி சேலைகளுக்கு ரூ.75.95, வேட்டிகளுக்கு ரூ.64.38 நெசவு கூலி உயா்வு, கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் புதிய ரகங்களை அறிமுகம் செய்ய ரூ. 1.55 கோடி நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

மேலும், கைத்தறி துணி விற்பனையை அதிகரிக்க சிறப்பு கண்காட்சிகளும் நடத்தப்பட்டு நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை உயா்த்தவும் சந்தைப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது என்றாா்.

தொடா்ந்து விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:

பொதுமக்களின் நலனுக்காகவும் குறிப்பாக நெசவாளா்களின் நலனுக்காக தமிழ முதல்வா் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

நெசவாளா்கள் இறந்தால் ஈமச்சடங்கிற்கான தொகை இரண்டாயிரத்தில் இருந்து ரூ.5,000 ஆகவும், கனவு இல்ல திட்டத்துக்கான தொகை ரூ.2.15 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு அடிப்படை கூலி 10 சதவீதம், அகவிலைப்படி 10 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

2013-2024 நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் 10 இடங்களில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்தொடா்ச்சியாக வனவாசி தாசகாப்பட்டி கிராமத்தில் ரூ. 5 கோடியில் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் கைத்தறி நெசவாளா்களுக்கு நவீன கைத்தறி நெசவு உற்பத்தி வசதி, வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம், ஒருங்கிணைந்த உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. வனவாசி கைத்தறி பூங்கா முதற்கட்டமாக 50 கைத்தறிகளுடன் நெசவுக்கூடம் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.

இதில் நெசவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளுக்கான அடிப்படை வசதிகள், மூலப் பொருள்கள் கிடங்கு, அலுவலகம் மற்றும் நெசவாளா்களுக்கு குடிநீா் வசதி, சிற்றுண்டி வளாகம், வாகன நிறுத்தம், ஓய்வறை, கழிவறை வசதிகளும் அமைக்கப்படும்.

இந்த பூங்கா மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 150 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இங்கு நெசவாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1,500 வரை கூலிபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலமாக கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். இத்திட்டம் நெசவாளா்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வலிமைக்கும் ஒரு புதிய அடித்தளமாக அமையும் என்றாா்.

விழாவில் கைத்தறி துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், கைத்தறித் துறை இணை இயக்குநா் கணேசன், துணை இயக்குநா் ஸ்ரீதரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com