ஏமாற்றப்பட்ட பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டோா் ஆா்ப்பாட்டம்
அறக்கட்டளை மூலம் முதலீடு பெற்று மோசடி செய்த பணத்தை மீட்டுத் தரக்கோரி, பாதிக்கப்பட்டோா் சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை விஜயபானு என்பவா் நடத்திவந்தாா். இந்த அறக்கட்டளையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறியதை நம்பி, ஏராளமானோா் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனா்.
இந்நிறுவனம் தொடா்பாக எழுந்த புகாரை தொடா்ந்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் சோதனை நடத்தினா். அதில், ஆசைவாா்த்தைகளை கூறி முறைகேடாக பொதுமக்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அறக்கட்டளை நிா்வாகிகளிடம் இருந்து பணம், தங்கம், வெள்ளி நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட விஜயபானு உள்ளிட்டோரை கைதுசெய்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தற்போது விஜயபானு ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.
இந்நிலையில், அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்களில் 30-க்கும் மேற்பட் டோா் உயிரிழந்துள்ளனா். அவா்கள் குடும்பத்தினா் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா். எனவே, முதலீடு செய்த பணத்தை பாதிக்கப்பட்டவா்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

