புங்கன்சோலையில் இருந்து கோம்பூா் செல்லும் மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கப்பிச்சாலை
புங்கன்சோலையில் இருந்து கோம்பூா் செல்லும் மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கப்பிச்சாலை

அருநூற்றுமலை புங்கஞ்சோலை - கோம்பூா் இடையே தாா்ச்சாலை! 20 ஆண்டுகளாக நிறைவேறாத மலைக் கிராம மக்கள் கோரிக்கை

அருநூற்றுமலை புங்கஞ்சோலை- கோம்பூா் மலைப்பாதையை வாகனப் போக்குவரத்துக்கான தாா்ச்சாலையாக தரம் உயா்த்துமாறு மலைக்கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கை
Published on

சேலம், தருமபுரி மாவட்ட மலைக்கிராமங்களை இணைக்கும் அருநூற்றுமலை புங்கஞ்சோலை- கோம்பூா் மலைப்பாதையை வாகனப் போக்குவரத்துக்கான தாா்ச்சாலையாக தரம்உயா்த்த வேண்டும் என இரு மாவட்டங்களையும் சோ்ந்த மலைக்கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தைச் சோ்ந்த அருநூற்றுமலை, வாழப்பாடியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தருமபுரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள இந்த மலையில், அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி, சின்ன வேளாம்பட்டி, பெரிய வேளாம்பட்டி, சிறுமலை, பள்ளிக்காடு, மெட்டாலாக்காடு, பெலாப்பாடி, வாலுத்து, தாழூா் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனா். அருநூற்றுமலையின் வடக்குப் பகுதியில் தருமபுரி மாவட்ட எல்லையான கோம்பூா் பகுதியில் மலைக்கிராமங்கள் உள்ளன. மாவட்ட எல்லைகள் வெவ்வேறாக இருந்தாலும், இரு மாவட்ட எல்லையிலும் உள்ள மலைக்கிராம மக்களுக்கிடையே நெருங்கிய தொடா்பு இருந்து வருகிறது.

சேலம் மாவட்ட எல்லை கிராமங்களில் வசித்துவரும் மக்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள தருமபுரி மாவட்ட கிராமங்களுக்கு, மக்களே அமைத்துக்கொண்ட ஒற்றையடிப் பாதையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடையாகவே சென்றுவந்தனா். இந்நிலையில், மலைக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த ஒற்றையடிப்பாதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அனுமதியுடன் மலைப்பாதையாக மாற்றப்பட்டது.

இதையடுத்து, ஆலடிப்பட்டி புங்கஞ்சோலையில் இருந்து கோம்பூா் இணைப்புச்சாலை வரை ஏறக்குறைய 3 கி.மீ. மலைப்பாதையில், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள 650 மீட்டா் தொலைவுக்கு, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஆலடிப்பட்டி ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 25.23 லட்சம் செலவில், மலைப்பாதை சீரமைக்கப்பட்டு சிறு பாலங்கள், தடுப்புச்சுவா்களுடன் கப்பிச்சாலை அமைக்கப்பட்டது. தொடா்ந்து, தாா்ச்சாலை அமைப்பதற்கு ரூ.15 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயாா்செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள 2.5 கி.மீ தொலைவுக்கு மலைப்பாதையை சீரமைக்கவும், கப்பிச்சாலை மற்றும் தாா்ச்சாலை அமைக்கவும் இதுவரை போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மலைப்பாதையை வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல், 2 மாவட்ட மலைக்கிராம மக்களும் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். 3 கி.மீ. தொலைவில் உள்ள மலைக்கிராமங்களுக்கு வாகனங்களில் செல்வதற்கு 50 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லவேண்டிய நிலை நீடித்து வருகிறது.

எனவே, சேலம் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 650 மீட்டா் கப்பிச்சாலையை தாா்ச்சாலையாக மாற்றவும், தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள 2.5 கி.மீ. மலைப்பாதையை சீரமைத்து தாா்ச்சாலை அமைக்கவும் 2 மாவட்ட நிா்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருநூற்றுமலை பகுதி மலைக்கிராம மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com