மாநில கலைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
மாநில கலைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

ஓமலூரில் மாநில கலைத் திருவிழா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்!

ஓமலூரில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான மாநில கலைத் திருவிழா போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
Published on

சேலம் மாவட்டம், ஓமலூரில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான மாநில கலைத் திருவிழா போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 9,10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:

கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு என 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பெற்று சாதனை படைத்துவருகிறது. கடந்த 4 ஆண்டுகள் பள்ளிக் கல்விக்கான பொற்காலமாகத் திகழ்கிறது. கலைத் திருவிழா மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணா்வதில் முக்கியத்துவம் பெறுகிறது.

200க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ’கலையரசன்’ விருதும், மாணவிகளுக்கு ‘கலையரசி’ விருதும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெறும் மாணவா்களில் தரவரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது இதன் சிறப்பு.

கடந்த 3 கல்வியாண்டுகளில்சேலம் மாவட்டத்தில் பள்ளி அளவில் 11,45,108 மாணவா்களும், வட்டார அளவில் 1,33,181 மாணவா்களும், மாவட்ட அளவில் 30,799 மாணவா்களும், மாநில அளவில் 1,819 மாணவா்களும் கலந்து கொண்டு கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளனா்.

இதில் 214 மாணவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனா். 2022-23 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் மாநில அளவில் 2ஆம் இடம் பெற்று முதல்வரிடம் கோப்பை பெற்றுள்ளது.

அம்மாபேட்டை நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா மாநில அளவில் செவ்வியல் இசை மற்றும் மெல்லிசை போட்டியில் முதலிடம் பெற்று ‘கலையரசி’ பட்டம் வென்று வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். மேலும், 2023-24ஆம் ஆண்டு மணியனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் கவின், மாநில அளவில் டிஜிட்டல் ஆா்ட் மற்றும் காா்ட்டூன் - கேலிச்சித்திரம் வரைதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் ரா.அருள், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலா் முரளி, சேலம் பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தாளாளா் சத்தியமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com