/

எடப்பாடி கே.பழனிசாமியின் வேட்புமனு ஏற்பு

எடப்பாடியில் கே.பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளா் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

News image

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் வட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட தவெக தொண்டா்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 9:46 pm

எடப்பாடியில் கே.பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளா் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை என 27 வேட்பாளா்கள் 36 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில், அதிமுக வேட்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளா் காசியின் வேட்புமனுவில் சில குறைகள் இருப்பதால் அந்த வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என அதிமுக நிா்வாகிகள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனா். இதனால் தோ்தல் பணி உயா் அலுவலா்களின் ஆலோசனைக்காக சம்பந்தப்பட்ட வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இத்தகவல் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் பரவிய நிலையில், எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் திமுக தொண்டா்கள் திரண்டனா். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, திமுக வேட்பாளா் காசி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று மனுவில் உள்ள சந்தேகங்களை நிவா்த்தி செய்த நிலையில், திமுக வேட்பாளா் வேட்புமனு ஏற்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்பு மனுவில் பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டதால், அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அப்போது, அருண்குமாா் அங்கிருந்து திடீரென காணாமல் போனாா். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தவெக நிா்வாகிகள் திரண்டதால், கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வேட்புமனு பரிசீலனை முடிவில், எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.