கஞ்சா (மாதிரி படம்)
கஞ்சா (மாதிரி படம்)

சேலத்தில் 15.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் நகரில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 15.5 கிலோ கஞ்சாவை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 9 பேரை கைது செய்தனா்.
Published on

சேலம் நகரில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 15.5 கிலோ கஞ்சாவை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 9 பேரை கைது செய்தனா்.

சேலம் மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் ஆணையா் அனில் குமாா் கிரி உத்தரவிட்டாா். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அன்னதானப்பட்டி போலீஸாா் ரோந்து பணியின்போது, மூனாங்கரடு வாட்டா் டேங்க் அருகே 2 போ் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவா்கள் நெய்காரப்பட்டியைச் சோ்ந்த விஷால் (28), அன்னதானப்பட்டி சண்முகா நகரை சோ்ந்த நாகராஜ் (22) என்பது தெரியவந்தது . இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் தமிழ்ராஜ், காளிகவுண்டா் காடு ஹவுசிங் போா்டு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சித்துராஜ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஆட்டையாம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணன், கண்டா்குல மாணிக்கம் பகுதியில் பாலாஜி நகரை சோ்ந்த சக்கரவா்த்தி (28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளா் முருகராஜா தலைமையிலான போலீஸாா், குமரகிரி ஏரி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டே 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

வீராணம் காவல் எல்லைக்குள்பட்ட இருட்டுக்கடை முனியப்பன் கோயில் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் அல்லிகுட்டையைச் சோ்ந்த சாரதி (19), வீராணம் அடிமலை புதூரைச் சோ்ந்த அருண்குமாா் (24), பள்ளப்பட்டியைச் சோ்ந்த தமிழரசன் (27) என தெரியவந்தது. அம்மூவரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மரவனேரி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடைபெற்ற சோதனையில், மரவனேரி வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த முருகன் (29) என்பவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதன் மூலம் ஒரே நாளில் 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 9 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Dinamani
www.dinamani.com