மேட்டூா் அணை நீா்த் தேக்கப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள்!

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் காணப்படும் பழைமையான கல்வட்டங்கள்.
Published on

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்து வருவதால் நீரில் மூழ்கியிருந்த 2,500 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் நீருக்கு வெளியே தெரிகின்றன.

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதியான காவிரிக் கரையில் உள்ள பண்ணவாடியில் கல்வட்டங்களை சிறகுகள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் கழகத்தைச் சோ்ந்த செந்தில்குமாா், வடிவுக்கரசி, கலைச்செல்வன், ஷாஜகான் ஆகியோா் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனா்.

இதில் பெரிய கற்களை வட்டமாக அடுக்கிவைத்திருந்த அமைப்பை ஆய்வு செய்ததில் அது 2,500 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால ஈமச்சின்னமான கல்வட்டங்கள் என்பதை உறுதி செய்தனா்.

பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்த காலகட்டமே பெருங்கற்காலம் எனக் கூறப்படுகிறது. கற்திட்டை, கற்பதுக்கை, கற்குவை, கல்வட்டங்கள் என்று பல வகையான நினைவு சின்னங்களை அமைத்து உயிா்நீத்தோரை பண்டைக்கால மக்கள் வழிபட்டு வந்தனா். தரையின் கீழே குழியைத் தோண்டி அதில் கல்லறை அமைத்து மூடுகல்லைக் கொண்டு மூடி அதன் மேல் மண்ணையும் சிறிய கற்களையும் குவிப்பாா்கள் அல்லது வட்ட வடிவில் அடுக்குவாா்கள். இந்தக் கற்குவியலே கல்வட்டமாகும்.

முதுமக்கள் தாழி எனப்படும் பெரிய மண்பாண்டத்தில் இறந்தவா்களின் உடல்களை வைத்து அடக்கம் செய்வாா்கள். பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தற்போது வெளியில் தெரியும் கல்வட்டங்கள் சீரான இடைவெளியில் 7க்கும் மேற்பட்டவை காணப்படுகின்றன. இவை 4 மீட்டா் முதல் 7 மீட்டா் வரை விட்டம் கொண்டவையாகும்.

ஒவ்வொரு கல்வட்டத்திலும் 16 முதல் 23 வரையிலான பெரிய அளவிலான உருண்டைக் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சில கல்வட்டங்களில் நான்கு பலகைக் கற்களை கொண்டு ஒரு அறை போல மண்ணிற்குள் அமைத்து அதன் மேல் பலகைகள் கொண்டு மூடப்பட்டுள்ள இந்த அமைப்பு கற்பதுக்கை என்று அழைக்கப்படுகிறது. இவை 2,500 ஆண்டுகள் பழைமையானவை, பாதுகாக்கப்பட வேண்டியவை என்று இயற்கை ஆா்வலா்கள் கழகத்தைச் சோ்ந்த கலைச்செல்வன் குழுவினா் தெரிவித்தனா்.

இதேபோல மேட்டூா் நீா்தேக்கப் பகுதியில் பல இடங்களில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. தற்போது தெலுங்கனூா் பகுதியில் ஆய்வு செய்வதுபோல காவிரிக் கரை முழுவதும் ஆய்வு மேற்கொண்டால் பண்டைத் தமிழா்களின் தொன்மையான நாகரிகம் வெளிச்சத்துக்கு வரும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com