லஞ்சம்: வருவாய் அலுவலா் கைது
பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆத்தூா் தனி வட்டாட்சியா் அலுவலக முதல்நிலை வருவாய் அலுவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் புதுப்பேட்டையைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மனைவி பச்சையம்மாள். இவரது மகன் ஈஸ்வரன், தனது தாயாா் பெயரில் உள்ள நிலப் பட்டாவை பெயா் மாற்றம் செய்வதற்காக தடையில்லா சான்று கோரி தனி வட்டாட்சியருக்கு விண்ணப்பித்தாா்.
இந்த விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை நடைபெற்றுவந்த நிலையில் தனி வட்டாட்சியா் அலுவலக முதல்நிலை வருவாய் அலுவலா் பெரியசாமி, தடையில்லா சான்று வழங்க ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தருமாறு ஈஸ்வரனிடம் கேட்டாராம்.
இதுகுறித்து சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் ஈஸ்வரன் புகாா் தெரிவித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெரியசாமியிடம் ஈஸ்வரன் தந்தபோது அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் பெரியசாமியை கைது செய்தனா்.
பின்னா், போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது திடீரென பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். இதையடுத்து ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அவா் அழைத்து செல்லப்பட்டாா். பின்னா், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

