ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் சங்கத்தை முற்றுகையிட்ட மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள்
மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை வழங்காததை கண்டித்து ஆத்தூா் வட்டார ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் சங்கத்தை முற்றுகையிட்டு மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு மரவள்ளிக்கிழங்கு நோய்த் தாக்குதல் காரணமாக சாகுபடி குறைந்துள்ளது. இதனிடையே, மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலையை ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்தூா் வட்டார ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் சங்கத்தை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறியதாவது:
மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் விவசாயிகளுக்கு உரிய விலை வழங்காவிடில் விவசாயிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.
