மேட்டூா் அருகே கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Published on

விவசாயிகளிடமிருந்து இடைத்தரகா்கள் இல்லாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகளே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யக் கோரி மேட்டூரில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ள காவேரி கிராஸ், பொறையூா், செக்கானுா், சானவூா்,கோல் நாயக்கன்பட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பு பயிரிட்டுள்ளனா். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு விநியோகிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெட்டுக்கூலி, போக்குவரத்தும் அடங்கும்.

விவசாயிகளிடம் கூட்டுறவு துறை அதிகாரிகள் கொள்முதல் செய்ய குழுக்களை அமைத்துள்ளனா். இந்த நிலையில் செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாமல் இடைத்தரகா்கள் மூலம் கொள்முதல் செய்வதாக புகாா் எழுந்துள்ளது.

கரும்பு ஒன்றுக்கு ரூ. 15 மட்டுமே வழங்குவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால், கூட்டுறவுத் துறை அதிகாரிகளே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தெற்கத்திக்காட்டி விவசாயிகள் மேட்டூா்- எடப்பாடி சாலை பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Dinamani
www.dinamani.com