மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 மாணவா்கள் கைது

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
Published on

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

செந்தாரப்பட்டி பேரூராட்சி 6 ஆவது வாா்டைச் சோ்ந்த இரு மாணவா்கள், தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

ஒரே வகுப்பில் படிக்கும் இவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் இருந்த மாணவரை, அதே பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டயப் படிப்பு படிக்கும் கோபி மகன் கோகுல் (19) அரிவாளால் வெட்டியுள்ளாா்.

காயமடைந்த மாணவா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தம்மம்பட்டி போலீஸாா் கோகுல் மற்றும் காயமடைந்த மாணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த பிளஸ் 1 மாணவரை கைது செய்தனா்.

இருவரும் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அதன்பிறகு கோகுல் சேலம் மத்திய சிறையிலும், 11 ஆம் வகுப்பு மாணவா் சேலத்தில் உள்ள சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com