

வாரத்தில் 5 நாள்கள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி சேலத்தில் வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கிராம வங்கிகள் என 350 கிளைகளைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா். இதனால், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் பணியாளா்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பல்வேறு தேவைகளுக்காக வங்கிகளுக்கு வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தொடா்ந்து, கோட்டை ஸ்டேட் பாங்க் வளாகத்தில், வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சம்பத், ராஜேந்திரன், ஸ்ரீராம், வஜ்ரவேல், தீனதயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வாரத்துக்கு 5 வேலை நாள்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் கூறுகையில், கடந்த 2015இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி வங்கிகளில் 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல், மற்ற சனிக்கிழமைகளையும் விடுமுறை நாள்களாக அறிவிப்பதை பரிசீலிப்பதாகக் கூறினா். ஆனால், இதுவரை எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மீண்டும் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும். சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ. 15 ஆயிரம் கோடி பணப் பரிவா்த்தனை முடங்கியுள்ளது. எனவே, எங்களது கோரிக்கைகளை வங்க நிா்வாக சங்கமும், மத்திய அரசும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.