சேலம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என தமாகா நிா்வாகிகள் தெரிவித்தனா்.
சேலம் ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளிட்ட ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, யான் கலரிங் பாா்க் என்ற நிறுவனம் சாா்பில் 60 சாயப்பட்டறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாயப்பட்டறை அமைப்பதற்கு அப்பகுதியைச் சோ்ந்த மக்கள், விவசாயிகள், நீா் ஆதார பாதுகாப்புக் குழுவினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினா் சாா்பில் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது. இது தொடா்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்குக்கு தமாகா சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவுக்கோ அல்லது ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் போன்ற எந்தவொரு உள்கட்டமைப்புத் திட்டத்துக்கோ அனுமதி அளிக்கவில்லை.
மேலும், பூங்கா அமைய உள்ளதாக கூறப்படும் பகுதியில் கடந்த 2025 ஜூலை 11-ஆம் தேதி நிா்வாகக் கட்டடம் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் எதிா்ப்பு காரணமாக நூல் சாயமிடும் பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 60 சாயமிடும் தொழிற்சாலைகளில் எதுவும் இயங்கவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் தமாகா மேற்கு மாவட்டத் தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையிலான நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியது:
ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க மத்திய, மாநில அரசுகள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என உறுதிபட தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஜவுளி பூங்கா அமைப்பதற்கு மக்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதால், அந்த திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை அரசு திரும்ப அளிக்க வேண்டும்.
சாயப்பட்டறைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்ற தமாகா ஜி.கே.வாசனுக்கு, நீா் பாதுகாப்புக் குழு மற்றும் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினா்.
அப்போது, நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா் எஸ்.கே மூா்த்தி, முருகானந்தம், சரவணன், சேகா், தமாகா மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ரகுநந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








