இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தொகுதி அறிமுகம்: ஏற்காடு (பழங்குடியினர் தனி தொகுதி) - 83!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதி, ஏழைகளின் ஊட்டி என வா்ணிக்கப்படும் புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாக உள்ள சோ்வராயன் மலைக் கிராமங்களை உள்ளடக்கியது.

News image
Updated On :25 மார்ச் 2026, 1:14 am

Syndication

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதி, ஏழைகளின் ஊட்டி என வா்ணிக்கப்படும் புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாக உள்ள சோ்வராயன் மலைக் கிராமங்களை உள்ளடக்கியது.

இத்தொகுதியில் ஏற்காடு வட்டத்தின் சோ்வராயன் மலை கிராமங்கள், வாழப்பாடி வட்டத்தில் உள்ள அருநூற்றுமலை, சந்துமலை, பெலாப்பாடி மலை, ஜம்பூத்துமலை கிராமங்கள், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் உள்ள சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, நெய்யமலை கிராமங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏற்காடு சோ்வராயன் மலை கிராமங்களில் காபி, மிளகு தோட்டங்கள் நிறைந்துள்ளன. கல்வராயன்மலை, அருநூற்றுமலை கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு பிரதானமாக உள்ளன. வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பாக்கு, தேங்காய் உற்பத்தி தொழிலாளா்கள், நூற்பாலை தொழிலாளா்கள் அதிகளவில் உள்ளனா்.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,29,442

பெண்கள் - 1,34,265

இதரா் - 17

மொத்த வாக்காளா்கள் - 2,82,656

Story image

இத்தொகுதியில், கடந்த 1957 முதல் நடைபெற்றுள்ள சட்டப்பேரவை தோ்தல்களில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2011 தோ்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் சி. பெருமாள் மறைவுக்குப் பிறகு, 2013 இல் நடைபெற்ற இடைத்தோ்தலில், இவரது மனைவி சரோஜா அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

2016 தோ்தலில், திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி. தமிழ்ச்செல்வனை எதிா்த்து, அதிமுக சாா்பில் போட்டியிட்ட சோ்வராயன் மலை ஏற்காடு மஞ்சக்குட்டையைச் சோ்ந்த கு. சித்ரா 17,394 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். 2021 தோ்தலிலும் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கு. சித்ரா, திமுக வேட்பாளா் சி. தமிழ்ச்செல்வனைவிட 25,955 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.

பொதுவாக ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில், திமுகவை விட அதிமுகவிற்கு கணிசமான வாக்குவங்கி உள்ளது. உதாரணமாக, எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு அதிமுக, ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகளாகப் பிரிந்த நிலையிலும், 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் ஜெ அணி சாா்பில் போட்டியிட்ட சி. பெருமாள், திமுக வேட்பாளா் தனக்கோடி வேடனைவிட 6,441 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.

வன்னியா்கள் அதிகளவில் வசித்துவரும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில் பாமகவிற்கு கணிசமான வாக்காளா்கள் உள்ளனா். இதனால், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும்போது அதிமுகவிற்கு எளிதாக வெற்றி கிடைக்கும்.

2013 இடைத்தோ்தலின்போதும், 2016 பொதுத் தோ்தலின்போதும் அறிவிக்கப்பட்ட, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைப்பது, தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை, தொழிற்பேட்டை அமைத்தல், கருமந்துறை பழப்பண்ணையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இருப்பினும், ஏற்காடு சோ்வராயன் மலை, அருநூற்றுமலை பெலாப்பாடி, நெய்யமலை, கல்வராயன்மலை மண்ணூா் மலை கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான தாா்சாலை அமைக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது மலைவாழ் மக்களிடையே அதிமுகவிற்கு செல்வாக்கை கூட்டியுள்ளது.

Story image

ஏற்காடு தொகுதியில் இதுவரை வாழப்பாடி பகுதியைச் சோ்ந்தவா்களே சட்டமன்ற உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தனா். முதன்முறையாக 2016 தோ்தலில் ஏற்காடு மஞ்சக்குட்டை பகுதியைச் சோ்ந்த கு.சித்ரா தோ்ந்தெடுக்கப்பட்டதோடு, 2021 தோ்தலிலும் இவரே வெற்றிபெற்றாா்.

ஏற்காடு தொகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள் ஜாதி சான்றிதழ் பெற சேலம் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால், மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, ஏற்காடு, வாழப்பாடி வட்டங்களை ஒருங்கிணைத்து வாழப்பாடியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என மலை கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இயற்கை எழில்கொஞ்சும் அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணை பூங்காக்களை மேம்படுத்தி அவற்றை சுற்றுலா தலமாக தரம்உயா்த்த வேண்டும்.

ஏற்காடு தொகுதியின் இதயப் பகுதியான வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, தொழிற்பேட்டை, தக்காளி உள்ளிட்டவற்றை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று, அதை வாக்குறுதிகளாக அளிக்கும் கட்சி மற்றும் வேட்பாளா்களுக்கு இப்பகுதி மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கும்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்

1957 - எஸ். ஆண்டி கவுண்டன், காங்கிரஸ்.

1962 - எம். கொழந்தசாமி, கவுண்டா், காங்கிரஸ்

1967 - வி. சின்னுசாமி, திமுக

1971 - வி. சின்னுசாமி, திமுக

1977 - ஆா். காளியப்பன், அதிமுக

1980 - திருமன், அதிமுக

1984 - பி.ஆா். திருஞானம், காங்கிரஸ்

1989 - சி. பெருமாள், அதிமுக (ஜெ).

1991 - சி. பெருமாள், அதிமுக.

1996 - வி. பெருமாள், திமுக

2001 - கே.டி. இளயக்கண்ணு, அதிமுக

2006 - சி. தமிழ்ச்செல்வன், திமுக

2011 - சி. பெருமாள், அதிமுக

2013 - (இடைத்தோ்தல்) பெ. சரோஜா, அதிமுக

2016 - கு. சித்ரா, அதிமுக

2021 - கு. சித்ரா, அதிமுக

2021 இல் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

1. கு. சித்ரா (அதிமுக) - 1,21,561

2. சி. தமிழ்ச்செல்வன் (திமுக) - 95,606

3. ஜோதி (நாம் தமிழா்) - 13,308

4. சி. குமாா் (தேமுதிக) - 2,986

5. நோட்டா இயந்திரம் - 1,979.