சேலம் மாநகரில் 200 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாநகர சாலைகளில் குவிந்து கிடக்கும் பட்டாசு குப்பைகள்
சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி வெடித்த 200 டன் பட்டாசு குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை அகற்றினா்.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனா்.
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் சேலம் மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனா். இதனால் சாலைகளில் பட்டாசுக் குப்பைகள், அட்டைப்பெட்டிகள், நெகிழி கழிவுகள் மலைபோல குவிந்து காணப்பட்டன.
சேலம் மாநகரில் முக்கிய பகுதிகளான டவுன், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அழகாபுரம், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பட்டாசுக் குப்பைக் கழிவுகள் அதிகளவில் தேங்கின.
மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் கூடுதலாக 200 மெட்ரிக் டன் பட்டாசுக் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை அகற்றினா். தூய்மைப் பணிகளை செவ்வாய்பேட்டை மற்றும் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு பகுதியில் மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகரம் முழுவதும் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வழக்கமாக மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு 522 டன் வரை குப்பைகள் தேங்கும். இந்நிலையில் வழக்கமான குப்பைகளை காட்டிலும், தீபாவளிக்கு வெடித்த பட்டாசுக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் என கூடுதலாக 200 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

