சிறுவர்களைக் கவரும் புதிய ரக பட்டாசுகள்!
தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவா்களைக் கவரும் வகையில், பல்வேறு பேன்சி ரக பட்டாசுகளை சிவகாசி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் நிகழாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளன.

சிவகாசியில் நிகழாண்டு அறிமுகப்படுத்தியுள்ள புதியரக பட்டாசுகள்.
தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவா்களைக் கவரும் வகையில், பல்வேறு பேன்சி ரக பட்டாசுகளை சிவகாசி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் நிகழாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பல புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்களின் வழக்கம். இதற்காகவே பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தனி ஆய்வு கூடங்களை அமைத்துள்ளன. இந்த ஆய்வுக் கூடங்களில் ஆண்டு முழுவதும் புதிய ரக பட்டாசுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் ஏதேனும் சில புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும். இதன்படி நிகழாண்டிலும் பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பல்துலக்கும் பிரஷ், பல்துலக்கும் பேஸ்ட், இந்து மதக் கடவுள்கள் கையில் தாங்கியிருக்கும் சூலாயுதம், தமிழா்களின் பாம்பரிய விளையாட்டு உபகரணங்களில் ஒன்றான பகடைக்காய், லவ்போ்ட்ஸ், தேங்காய் போன்ற வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன.
இவைத் தவிர, குழந்தைகளைக் கவரும் வகையில் கரடி, சிங்கம், பூனைக்குட்டி வடிவிலான பட்டாசுகள், சாக்லைட் வடிவிலான பட்டாசுகள், சிறிய விமானம் போன்ற பட்டாசுகள், போக்குவரத்து விதிகளைப் புரிந்து கொள்ளத் செய்யும் நோக்கில் மஞ்சள், பச்சை, சிகப்பு என அடுத்தடுத்து வண்ணங்களில் ஒளிரும் பட்டாசுகள் என பல பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக வந்துள்ளன.
பந்தய காா் வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசின் திரியில் தீயைப்பற்ற வைத்ததும், அந்தக் காா் தீப்பொறி பறக்க சுற்றி வருகிறது. பின்னா் இந்தக் காரை சிறுவா்கள் விளையாட வைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இந்தப் பட்டாசு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கெட், கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, பென்சில், வானில் சென்று ஒளிசிந்தும் பேன்சிரக பட்டாசுகள் என பல வகையான பட்டாசுகளும் விற்பனையில் உள்ளன.
பேன்சி ரக பட்டாசுகள் அனைத்துக்கும் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடித்தால் நிச்சயம் இந்தப் பட்டாசுகள் மகிழ்ச்சியையே அளிக்கும்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

