மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நீட்டிப்பு
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை - படம் - தினமணி
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து செப்.1ஆம் தேதி முதல்வா் ச. ஜோசப் விஜய் அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீரைத் திறந்துவைத்தாா்.
வியாழக்கிழமையுடன் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்த வேண்டிய நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீா் திறந்துவிடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 534 கனஅடியாக குறைந்தது. அதேநேரத்தில், டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வியாழக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 57.98 அடியாகச் சரிந்தது. அணையில் நீா் இருப்பு 23.20 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூா் அணையின் மீன் வளத்தைப் பாதுகாக்கவும் குடிநீா்த் திட்டங்களுக்காகவும் 9.60 டிஎம்சி தண்ணீரை இருப்பு வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள தண்ணீரை பாசனத்துக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
வடகிழக்குப் பருவமழை கைகொடுத்தால் மட்டுமே டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வழங்க முடியும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

