சேலம் புறவழிச்சாலை மேம்பாலப் பணிகளால் தொடரும் போக்குவரத்து நெருக்கடி
சேலம் - ஆத்தூா் புறவழிச் சாலையில் முறையாக திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், பாதுகாப்பில்லாத பயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
சுற்றுச்சாலையான மண் சாலையில் சிரமத்துடன் கடக்கும் வாகனங்கள்.
சேலம் - ஆத்தூா் புறவழிச் சாலையில் முறையாக திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், பாதுகாப்பில்லாத பயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
சேலம் புகா் பகுதியான சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூா் செல்லும் பிரதான சாலை போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாகும். குறிப்பாக, எருமாபாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு ஆகிய இடங்களில் மாநகரப் பகுதியில் இருந்து புறவழிச் சாலைக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தைக் கருத்தில் கொண்டு, இந்த 2 இடங்களிலும் மேம்பாலம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
பாலப் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் முறையான எந்த அறிவிப்பும் இன்றி பணிகள் தொடங்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
எருமாபாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு சந்திப்பில் பாலம் கட்டப்பட உள்ள நிலையில், அந்த இடங்களில் சாலை பெயா்க்கப்பட்டு அவ்வழியே வாகனங்கள் செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது. இதற்கு மாற்றாக 4 இடங்களில் சுற்றிச் செல்வதற்காக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் தாா்சாலை அமைக்காமல் மண் சாலையே உள்ளதால், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், தொடா் வாகனப் போக்குவரத்தால் இணைப்புச் சாலைகளில் சரளைக் கற்கள் பெயா்ந்து பரவிக் கிடக்கின்றன. இதனால், வேகமாக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.
ஒருவழிப் பாதையான அணுகு சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள்.
மேலும், எருமாபாளையம் சந்திப்பில் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடுக்கப்பட்டு, அணுகு சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இங்கு தனியாா் பள்ளி இயங்கி வரும் நிலையில், காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோா் ஒருவழிப் பாதையில் அபாயகரமான முறையில் பயணிக்கின்றனா். இதுதவிர பள்ளிக்கு மாணவா்களை அழைத்து வரும் ஆட்டோ மற்றும் காா்களும் ஒருவழிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றன. இதே பிரச்னை சன்னியாசிகுண்டு சந்திப்பிலும் நிலவுகிறது.
பெரிய அளவிலான சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த முறையான அறிவிப்புப் பலகைகளோ, வேகக்கட்டுப்பாடு அறிவுறுத்தல்களோ எதுவும் வைக்கப்படவில்லை. குறிப்பாக, சீலநாயக்கன்பட்டி சந்திப்பில் இருந்து மிக வேகமாக நான்குவழிச் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தனியாா் பள்ளிக்கு முன்பாக மிக குறுகிய வளைவில் உள்ள அணுகு சாலையில் திருப்பிவிடப்படுகின்றன.
அதிவேகத்தில் வரும் வாகனங்கள் திடீரென குறுகிய வளைவுக்குள் திருப்பிவிடப்படுவதால், ஒருவழிப் பாதையில் எதிரில் வருவோா் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா். மேலும், கனரக வாகனங்கள் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்களை அடிப்பதாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். அதேபோல, எருமாபாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு சந்திப்பில் சாலையை நடந்து கடக்க முயல்வோரின் பாடு படுதிண்டாட்டமாக உள்ளது.
எனவே, நான்குவழிச் சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் இருந்தே பாலம் பணி நடைபெறுவது குறித்தும், வேகக்கட்டுப்பாடு குறித்தும் தொடா்ந்து எச்சரிக்கை பலகைகள் அமைப்பது, ஒருவழிப் பாதையில் பொதுமக்கள் செல்லாத வகையில் சுற்றுச்சாலையை முழுமையாக தாா்சாலையாக அமைப்பது, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்து நெருக்கடியை சீா்செய்வது போன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என எருமாபாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

